Skip to main content

மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நாளை ஆலோசனை!

Published on 09/01/2022 | Edited on 09/01/2022

 

Union Health Minister to consult with state health ministers tomorrow

 

இந்தியாவில் கரோனா மற்றும் ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், மத்திய மற்றும் மாநில அரசுகள் இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றன. அதன் ஒருபகுதியாக, தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி, மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், மகாராஷ்ட்ரா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. அதே சமயம், கரோனா தடுப்பூசிப் போடும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர். 

 

இந்த நிலையில், இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு மீண்டும் 1.5 லட்சத்தைக் கடந்துள்ளது. இதையடுத்து, டெல்லியில் உள்ள இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (09/01/2022) மாலை 04.30 மணியளவில் மத்திய அமைச்சர்கள் மற்றும் அரசு உயரதிகாரிகளுடன் காணொளி மூலம் அவசர ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, மத்திய உள்துறை செயலாளர் அஜய்பல்லா மற்றும் மத்திய சுகாதாரத்துறைச் செயலாளர் உள்ளிட்டோர் காணொளி மூலமாகக் கலந்து கொண்டனர். 

 

அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நாளை (10/01/2022) பிற்பகல் 03.30 மணியளவில் காணொளி மூலம் ஆலோசனை நடத்தவுள்ளார். அதில் கரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் குறித்தும், தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் கூறுகின்றனர். 

 

மேலும், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு, அறிவிப்பாக வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மதுரை எய்ம்ஸ்; எம்பிக்களை எச்சரித்த மத்திய அமைச்சர்; அனல் பறந்த விவாதம்

Published on 11/02/2023 | Edited on 11/02/2023

 

Madurai AIIMS; Union minister warns DMK MPs; A heated debate

 

மதுரை எய்ம்ஸ் விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் மன்சுக் மாண்ட்வியாவிற்கும் திமுக எம்.பிக்களுக்கும் இடையே மக்களவையில் கடுமையான வாதங்கள் நடந்தது.

 

மக்களவையில் கேள்வி நேரத்தில் திமுக எம்.பி. டி.ஆர். பாலு, நாட்டில் எத்தனை மருத்துவமனைகள் அடிப்படை வசதிகள் இல்லாமல் கட்டப்பட்டுள்ளது. பிரதமரால் அடிக்கல் நாட்டப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் துவங்கப்படாத மருத்துவக் கல்லூரிகள் எத்தனை என கேள்விகள் எழுப்பினார்.

 

இதற்கு  பதில் அளித்த மத்திய அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா, “மதுரை எய்ம்ஸ் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் அரசியல் ஆக்குகின்றன. மதுரை எய்ம்ஸ் கல்லூரியில் மருத்துவமனை தொடங்கப்பட்டு விட்டது. மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். அங்கு உள்கட்டமைப்பு வசதிகள் மட்டும் மேம்படுத்தப்படவில்லை. ஆனால் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து இதை அரசியல் ஆக்குகின்றன. மதுரையில் கல்லூரி கட்ட உரிய நேரத்தில் மாநில அரசு நிதி ஒதுக்காததும், நிதியுதவி அளிப்பதாக சொன்ன ஜப்பான் பன்னாட்டு நிதியுதவி நிறுவன பிரதிநிதிகள் கடந்த 2 ஆண்டுகளாக மதுரைக்கு வர முடியவில்லை. இதனால் திட்ட செலவு அதிகரித்துள்ளது. இம்மாதிரியான அனைத்து தகவல்களையும் எதிர்க்கட்சி எம்.பிக்களுக்கு அளித்துள்ளோம். ஆனால் அதையும் மீறி எதிர்க்கட்சிகள் இதை அரசியல் ஆக்குகின்றனர். 

 

உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமலும், குறைந்த நோயாளிகள் மற்றும் குறைந்த பேராசிரியர்கள் ஆகியோரைக் கொண்டு இயங்கும் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கிறேன். இதனால்தான் என் மீது கோபப்படுகின்றனர் பரவாயில்லை. இதனால் பின்வாங்கி விட மாட்டேன்” எனக் கூறினார்.

 

ஆனாலும் அமைச்சர் பேசத் தொடங்கியதில் இருந்து திமுக எம்.பிக்கள் கடுமையாக எதிர்ப்புக் குரல் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இதனால் கோபமடைந்த அமைச்சர், “விடமாட்டேன். யாருக்கு என்ன கடிவாளம் போட முடியுமோ அது போடப்படும்” எனக் கூறினார். இதனைக் கேட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் எங்களை மிரட்டுகின்றார் மன்னிப்பு கேட்க வேண்டுமென சபாநாயகரிடம் வாதிட்டனர். தொடர்ந்து அவையில் இருந்து வெளியேறினர்.

 

 

Next Story

நாள் ஒன்றுக்கு 9 ஆயிரம் பேர் மரணம்; கொரோனாவால் முடங்கிய சீனா

Published on 02/01/2023 | Edited on 02/01/2023

 

9 thousand people passed away per day; China paralyzed by Corona

 

சீனாவில் கொரோனா பரவலைத் தடுக்க அந்நாடு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பல்வேறு இடங்களில் முகாம் அமைத்து தீவிர பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா பி.எஃப்.7 வகை தொற்று அந்நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையை வெகுவாகப் பாதித்துள்ளது.

 

பல்வேறு இடங்களில் முகாம் அமைத்து தீவிர பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இருந்தாலும் நாளுக்கு நாள் பரவலின் வேகம் அதிகரித்து வருகிறது. மருத்துவமனைகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் நாள்தோறும் அனுமதிக்கப்பட்டுக் கொண்டே உள்ளனர்.

 

அதே சமயம் கொரோனா தொற்றால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் காணப்படுகிறது. சீனாவில் நாள்தோறும் 9 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. மருத்துவமனைகளில் சடலங்கள் அதிகரித்துக்கொண்டே இருப்பதோடு மட்டுமல்லாமல் கொரோனா தொற்று அச்சத்தினால் இறந்தவர்களின் உடல்களை வாங்குவதற்கு உறவினர்கள் தயக்கம் காட்டுகின்றனர். 

 

இது குறித்த புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.