இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கரோனா தடுப்பூசி போடும் பணிகளை மத்திய, மாநில அரசுகள் முடுக்கிவிட்டுள்ளன. மேலும், மாநிலங்களுக்கு தேவையான கரோனா தடுப்பூசிகள் மற்றும் ஆக்சிஜன், வெண்டிலேட்டர், உள்ளிட்டவையை மத்திய அரசு தொடர்ந்து அனுப்பி வைத்து வருகிறது. அதேபோல், அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ரஷ்யா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளும் ஆக்சிஜன் டேங்கர்கள், மருத்துவ உபகரணங்களை இந்தியாவுக்கு விமானங்கள் மூலம் அனுப்பி வருகின்றன.
இந்த நிலையில், கரோனா சூழலைக் கருத்தில் கொண்டு 15- வது நிதிக் குழுவின் பரிந்துரையின் படி, 25 மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் உள்ளாட்சி அமைப்புகளுக்கு முதற்கட்டமாக ரூபாய் 8,923.8 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இது தொடர்பாக, மத்திய நிதி அமைச்சகம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், எந்த மாநிலத்திற்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பான பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதன்படி, அதிகபட்சமாக உத்தரபிரதேச மாநிலத்திற்கு ரூபாய் 1,441.6 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல், மகாராஷ்டிரா- ரூபாய் 861.4 கோடி, பீகார்- ரூபாய் 741.8 கோடி, மேற்கு வங்கம்- ரூபாய் 652.2 கோடி, ஆந்திரா- ரூபாய் 387.8 கோடி, அருணாச்சலப் பிரதேசம்- ரூபாய் 34 கோடி, அசாம்- ரூபாய் 237.2 கோடி, சத்தீஸ்கர்- ரூபாய் 215 கோடி, குஜராத்- ரூபாய் 472.4 கோடி, ஹரியானா- ரூபாய் 187 கோடி, ஹிமாச்சல் பிரதேசம்- ரூபாய் 63.4 கோடி, ஜார்கண்ட்- ரூபாய் 249.8 கோடி, கர்நாடகா- ரூபாய் 475.4 கோடி, கேரளா- ரூபாய் 240.6 கோடி, மத்திய பிரதேசம்- ரூபாய் 588.8 கோடி, மணிப்பூர்- 26.2 கோடி, மிசோரம்- 13.8 கோடி, ஒடிஷா- 333.8 கோடி, பஞ்சாப்- ரூபாய் 205.2 கோடி, ராஜஸ்தான்- ரூபாய் 570.8 கோடி, சிக்கிம்- ரூபாய் 6.2 கோடி, தமிழகம்- ரூபாய் 533.2 கோடி, தெலங்கானா- ரூபாய் 273 கோடி, திரிபுரா- ரூபாய் 28.2 கோடி, உத்தரகாண்ட்- ரூபாய் 85 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.