Skip to main content

'உற்பத்தித் துறைக்கு ரூபாய் 1.46 லட்சம் கோடி ஊக்கத்தொகை' - மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Published on 11/11/2020 | Edited on 11/11/2020

 

union cabinet has been approves union ministers press brief

 

இன்று (11/11/2020) காலை பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் காணொளி மூலம் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.

 

அமைச்சரவை கூட்டத்திற்குப் பின், டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், நிர்மலா சீதாராமன் ஆகியோர் அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து விளக்கினர்.

 

அப்போது பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், "10 முக்கிய உற்பத்தித் துறைளுக்கு ரூபாய் 1.46 லட்சம் கோடி ஊக்கத்தொகை வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகள் எவ்வளவு உற்பத்தி செய்கின்றனவோ, அதன் அடிப்படையில் சலுகை வழங்கப்படும். வாகன தயாரிப்பு, ஜவுளி உள்ளிட்ட முக்கியத் துறைகளுக்குச் சலுகைகள் கிடைக்கும்" என்றார்.

 

அதைத் தொடர்ந்து பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், "இந்தியாவை உற்பத்தி கேந்திரமாக மாற்ற ஊக்கத்தொகை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. சுயசார்பு இந்தியாவை உறுதிப்படுத்தும் நோக்கில் பல்வேறு முதலீட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. ஏ.சி., எல்.இ.டி பல்ப், ஸ்டீல் ஆகியவற்றின் உற்பத்திக்கு ஊக்கம் வழங்கப்படுகிறது. மருத்துவம், மின்னணு உள்ளிட்ட துறைகளில் உற்பத்தியை அதிகரிக்க ஊக்கத்தொகை தர முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

cnc

 

ஜவுளி, உணவுப்பொருள் தயாரிப்பு, பதப்படுத்துதல் ஆகிய துறைகளும் இந்த ஊக்கத் திட்டத்தின் கீழ் வருகின்றன. உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகையாக, அடுத்த 5 ஆண்டுகளில் ரூபாய் 1.46 லட்சம் கோடி செலவிடப்படும். ஜவுளித்துறைக்கு ரூபாய் 10,863 கோடி, உணவுப் பொருட்கள் துறைக்கு ரூபாய் 10,900 கோடி, சோலார் மின் உற்பத்தி துறைக்கு ரூபாய் 4,500 கோடி, இரும்பு உற்பத்தித் துறைக்கு ரூபாய் 6,322 கோடி, ஆட்டோமொபைல் துறைக்கு ரூபாய் 57,042 கோடி ஊக்கத்தொகை வழங்கப்படும். ஊக்கத் தொகை திட்டத்தின் மூலம் இந்தியாவிற்கு முதலீடுகள் அதிகரிக்கும்" என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்