Skip to main content

18 மாதங்களில் 7 ஆயிரம் கிராமங்களுக்கு 4 ஜி - ஆறாயிரம் கோடி ஒதுக்கிய மத்திய அரசு!

Published on 18/11/2021 | Edited on 18/11/2021

 

4g

 

பிரதமர் மோடி தலைமையில் நேற்று (17.11.2021) மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. குறிப்பாக தொலைத்தொடர்பு வசதி இல்லாத, ஐந்து மாநிலங்களைச் சேர்ந்த 44 மாவட்டங்களில் உள்ள 7,266 கிராமங்களில் தொலைபேசி டவர்கள் அமைக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தக் கிராமங்களில் தொலைத்தொடர்பு வசதி ஏற்படுத்தப்படவுள்ளது.

 

மேலும், இந்த டவர்கள் மூலம் இந்தக் கிராமங்களுக்கு 4ஜி இணைய சேவை வழங்கப்படவுள்ளது. இந்தத் திட்டத்திற்காக 6,466 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தத் திட்டம் 18 மாதங்களில் செயல்படுத்தப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

ஆந்திரா, சத்தீஸ்கர், ஜார்கண்ட், மஹாராஷ்ட்ரா, ஒடிசா ஆகியவை இந்தத் திட்டத்தால் பயனடையவுள்ள ஐந்து மாநிலங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதில் மாற்றம் செய்யும் மத்திய அரசு!

Published on 16/12/2021 | Edited on 16/12/2021

 

MARRIAGE

 

இந்தியாவில் பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது 18 ஆக உள்ள நிலையில், அதை 21 ஆக உயர்த்த வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை எழுப்பப்பட்டுவருகிறது. கடந்த ஆண்டு, மகப்பேறு இறப்பு விகிதங்களைக் குறைத்தல் மற்றும் ஊட்டச்சத்து அளவை மேம்படுத்துதல் குறித்து ஆராய மத்திய அரசு அமைத்த குழுவும், பெண்களின் திருமண வயதை ஆண்களின் திருமண வயதிற்கு சமமாக உயர்த்த வேண்டும் என பரிந்துரை செய்தது.

 

இந்நிலையில் நேற்று (15.12.2021) கூடிய மத்திய அமைச்சரவை, பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்த அனுமதியளித்துள்ளதாக அதிகாரபூர்வமாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 21 ஆக உயர்த்த குழந்தைத் திருமணத் தடைச் சட்டம் 2006, சிறப்புத் திருமணச் சட்டம் மற்றும் இந்து திருமணச் சட்டம் 1955 போன்ற சட்டங்களில் மத்திய அரசு திருத்தம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Next Story

வேளாண் சட்டம்.. இலவச உணவு தானிய திட்டம் - மத்திய அமைச்சரவையின் முக்கிய முடிவுகள்!

Published on 24/11/2021 | Edited on 24/11/2021

 

anurag thakur

 

வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி கிட்டத்தட்ட ஒருவருடமாக விவசாயிகள், டெல்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாகவும், புதிய வேளாண் சட்டங்களை முறைப்படி திரும்பப் பெற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நவம்பர் 19ஆம் தேதி அறிவித்தார்.

 

இந்தநிலையில், இன்று (24.11.2021) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், "பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று, மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான நடைமுறைகளை நிறைவுசெய்தது. வரவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், இந்த மூன்று சட்டங்களையும் திரும்பப் பெறுவது எங்கள் முன்னுரிமையாக இருக்கும்" என தெரிவித்துள்ளார்.

 

மேலும், ஏழை மக்களுக்கு மாதந்தோறும் ஐந்து கிலோ இலவச அரிசி அல்லது கோதுமை மற்றும் கொண்டைக்கடலை ஆகியவற்றை ரேஷன் கடைகள் மூலமாக வழங்கும் பிரதம மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தை அடுத்த ஆண்டு மார்ச் வரை நீட்டிக்கவும் மத்திய அமைச்சரவை முடிவெடுத்துள்ளதாக அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.

 

இம்மாத தொடக்கத்தில் உணவுத்துறை செயலாளர் சுதன்ஷு பாண்டே, நவம்பர் மாதத்திற்குப் பின்னர் பிரதம மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தை நீட்டிக்க மத்திய அரசிடம் எந்த திட்டமும் இல்லை என தெரிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து, பல்வேறு எதிர்க்கட்சிகள் இத்திட்டத்தை நீட்டிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தன. இந்தநிலையில், தற்போது இலவச உணவு தானிய திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது.