‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த ஒன்றிய அமைச்சரவை!

The union cabinet approved the one nation one election bill

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் என்பது தான் மத்திய பா.ஜ.க அரசின் கனவு திட்டம். அந்த திட்டத்தை அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்குள் அமல்படுத்தியே ஆகவேண்டும் என்று பா.ஜ.க அரசு தீவிர முனைப்பில் செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதனை மீறியும், ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதற்காக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் மத்திய அரசு கடந்தாண்டு செப்டம்பர் மாதம் குழு ஒன்றை அமைத்தது.

அந்த குழு, பொதுமக்கள் அரசியல் கட்சிகள், முன்னாள் நீதிபதிகள் உள்ளிட்ட பலரிடம் கருத்து கேட்டு 18,626 பக்கங்களைக் கொண்ட அறிக்கையை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவிடம் கடந்த மார்ச் மாதம் சமர்பித்தது. இதையடுத்து, சில தினங்களுக்கு முன்பு அந்த அறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான மசோதா, நாடாளுமன்றத்துல் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவம்பர் 25ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடர் டிசம்பர் 20ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. எதிர்க்கட்சிகள் சார்பில் அதானி மீதான குற்றச்சாட்டு, மணிப்பூர் விவகாரம், ஃபெஞ்சல் புயல் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு அனுமதி மறுக்கப்படுவதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.

இந்த சூழ்நிலையில், டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி தலைமையில் இன்று (12-12-24) மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில், ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவை, நடப்பு குளிர்காலக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Parliament
இதையும் படியுங்கள்
Subscribe