"தமிழகத்தில் ரூ.1.03 லட்சம் கோடியில் சாலைத் திட்டங்கள்" - மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு!

union budget finance minister nirmala sitharaman speech at parliament house

2021- 2022 ஆம் நிதி ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து உரையாற்றிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "சுயசார்பு சுகாதாரத் திட்டத்திற்கு ரூபாய் 64,180 கோடி மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. ரூபாய் 1.41 லட்சம் கோடியில் நகர்ப்புற தூய்மை இந்தியா திட்டம் அறிமுகப்படுத்தப்படும். நகர்ப்புறங்களில் அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் சுத்தமான குடிநீர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. கரோனா தடுப்பூசிக்கு மத்திய பட்ஜெட்டில் ரூபாய் 35,000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பை உறுதிப்படுத்த பழைய வாகனங்களைத் திரும்பப் பெறும் கொள்கை அறிமுகப்படுத்தப்படும். பழைய மோட்டார் வாகனங்களின் பயன்பாட்டை தடுத்து, அதன் மூலம் காற்று மாசைக் குறைக்க புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

நாடு முழுவதும் ஊட்டச்சத்தை மேம்படுத்த புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 116 மாவட்டங்களில் இரண்டாம் ஊட்டச்சத்து இயக்கம் செயல்படுத்தப்படும். நாடு முழுவதும் 2.86 கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படும். இந்தியாவில் உலக சுகாதார அமைப்பின் கிளை தொடங்கப்படும். நீர்வளத்துறையில் 'ஜல் ஜீவன் மிஷன்' என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஜவுளித்துறைக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் மிகப்பெரிய முதலீட்டுப் பூங்கா திட்டம் செயல்படுத்தப்படும். மூன்று ஆண்டுகளில் 7 ஜவுளிப் பூங்காக்கள் தொடங்கப்படும். அரசின் சொத்துக்கள் மூலம் வருவாயை ஈட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

மூலதன செலவினங்களுக்கு ரூபாய் 5.45 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பல விமான நிலையங்களில் பராமரிப்பு பணி தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படும். தமிழகத்தில் ரூபாய் 1.03 லட்சம் கோடியில் புதிய சாலைத் திட்டங்கள் அமைக்கப்படும். உள்கட்டமைப்பு வசதிக்கு ரூபாய் 20,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரூபாய் 1.03 லட்சம் கோடியில் தமிழகத்தில் 3,500 கிலோ மீட்டர் சாலைப் பணிகள் நடைபெறுகின்றன. நாடு முழுவதும் 13 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. நாடு முழுவதும் மேலும் 11,500 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலைகள் அமைக்கும் பணிகள் தொடங்கும். தமிழகம் மற்றும் கேரளாவை ஒருங்கிணைக்கும் வகையில் சாலைத் திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன. மதுரையில் இருந்து கேரளாவின் கொல்லம் வரை நவீன வசதிகளுடன் கூடிய நெடுஞ்சாலை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி - கேரளாவின் பல பகுதிகளை இணைக்க நவீனவசதிகளுடன் கூடிய புதிய சாலை அமைக்கப்படும்" என்றார்.

Nirmala Sitharaman union budget UNION FINANCE MINISTER
இதையும் படியுங்கள்
Subscribe