மத்திய பா.ஜ.க அரசு தேர்தல் வாக்குறுதிகள் எதையுமே நிறைவேற்றவில்லை- முதலமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டு!

நாட்டின் பொருளாதார வளர்ச்சியை சீர்குலைத்த மத்திய பா.ஜ.க அரசை கண்டித்து புதுச்சேரி தலைமை தபால் நிலையம் அருகில் நேற்று (23.11.2019) மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

அகில இந்திய அமைப்புசாரா தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். அமைப்பு சாரா தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செல்வகணபதி முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட முதலமைச்சர் நாராயணசாமி பேசும் போது, “மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்த காலங்களில் வேலை வாய்ப்புகள், பொருளாதார வளர்ச்சி, ஏற்றுமதி போன்றவை அதிகமாக இருந்தன. கட்டுமான பணிகள் அதிக அளவில் நடைபெற்றது. அரசு வேலைவாய்ப்பு தடையில்லாமல் கிடைத்தது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9 சதவீதத்திற்கு குறையவே இல்லை. விவசாயிகளின் விளை பொருட்களுக்கு நல்ல விலை கிடைத்தது. காங்கிரஸ் ஆட்சி அனைத்து துறை வளர்ச்சிகளிலும் கவனம் செலுத்தியது. 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் போது பா.ஜ.க.வினர் பொய்யான வாக்குறுதிகளை அளித்து தேர்தலில் வெற்றி பெற்றனர். தேர்தலில் அளித்த வாக்குறுதிகள் எதையுமே அவர்கள் நிறைவேற்றவில்லை.

union bjp government did not implement the manifesto pondicherry cm narayansamy speech

பிரதமர் மோடி 5 ஆண்டுகளில் 72 நாடுகளுக்கு சென்று வந்துள்ளார். ஒரு பிரதமர் வெளிநாட்டுக்கு சென்று வரும்போது, அந்த நாட்டின் முதலீடு, அங்குள்ள தொழிற்சாலைகள் நமது நாட்டுக்கு வரும். ஆனால் இவர் சென்று வந்த பிறகு எதுவும் வந்ததுபோல் தெரியவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் தொழிற்சாலைகள் சிறப்பாக இயங்கி வந்தன. ஆனால் தற்போது தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருகின்றன. பொருளாதார வளர்ச்சி குறைந்து வருகிறது.

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு அடுத்த படியாக நாம் தான் அதிக சதவீத வாக்குகள் பெற்றுள்ளோம். எனவே பா.ஜ.க.வின் மக்கள் விரோத போக்கை காங்கிரஸ் கட்சிதான் எதிர்க்க வேண்டும்.

புதுச்சேரி மாநிலத்தில் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த விடாமல் கவர்னர் கிரண்பேடி தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகிறார். அதனையும் மீறி நாம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். இதனை மக்களிடம் எடுத்து கூற வேண்டும். ரேஷன் கார்டுகளுக்கு இலவச அரிசி வழங்க ரூ.154 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நிதி இருந்தாலும் அரிசி போட முடியாத வகையில் கவர்னர் தடை செய்து வருகிறார்” என்று குறிப்பிட்டார். ஆர்ப்பாட்டத்தில் எம்.எல்.ஏக்கள் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

bjp government cm narayanasamy India Pondicherry
இதையும் படியுங்கள்
Subscribe