மானை வேட்டையாடிய வழக்கில் பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது ஜோத்பூர் நீதிமன்றம். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக நடைபெற்றுவந்த இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சல்மான் கான், சயீப் அலி கான், சோனாலி பிந்த்ரே, தபு மற்றும் நீலம் ஆகியோரில் சல்மான் கான் மட்டுமே குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த வழக்கை இத்தனை காலம்நடத்தி, அதில் வெற்றியும் கண்டிருப்பவர்கள் பிஸ்னோயி எனும் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள்தான்.
15ஆம் நூற்றாண்டு காலத்தில் குரு ஜம்பேஷ்வர் என்பவரால் பிஸ்னோயி சமுதாயம் உருவாக்கப்பட்டது. இந்த சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் இயற்கை, விலங்குகளைப் பாதுகாத்து, கடவுளுக்கு சேவை செய்யவேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார். விலங்குகளைக் கொல்வதும், மரங்களை வெட்டுவதும் அவர்களது நம்பிக்கையில் பாவச்செயல். காலம்காலமாக உயிரைக் கொடுத்தேனும் அதையே பின்தொடர்ந்தும் வருகின்றனர். ஒரு மார்பில் குழந்தைக்கும், மற்றொரு மார்பில் குட்டிமானுக்கும் ஒரு தாய் பிஸ்னோயி பால் கொடுக்கத் தயங்க மாட்டார் என்றால், மொத்த பிஸ்னோயிக்களும் எப்படிப்பட்டவர்கள் என்பதை நீங்களே நினைத்துக்கொள்ளுங்கள்.
உதாரணமாக, 1730ஆம் ஆண்டு ஜோத்பூர் மன்னர் கேஜ்ரி மரங்களை வெட்டி, அங்கு மிகப்பெரிய அரண்மனை கட்டுவதற்கு திட்டமிட்டார். அப்போது, பிஸ்னோயி மக்கள் அதைக் கடுமையாக எதிர்த்தனர். பிஸ்னோயி சமுதாயத்தைச் சேர்ந்த அமிர்தா தேவி மற்றும் அவரது நான்கு மகள்கள் சேர்ந்து கேஜ்ரிமரங்களைக் கட்டியணைத்துக் கொண்டு, அவற்றை வெட்ட அனுமதிக்கவில்லை. அதேபோல், ஏராளமான பிஸ்னோயிக்கள் செய்ய, வேறு வழியின்றி படைவீரர்கள் ஆயிரக்கணக்கானோரைக் கொன்று குவித்தனர். இந்த சம்பவமே உத்தர்காண்ட் மாநிலத்தின் சிப்கோ போராட்டத்திற்கு முன்னோடி என்றும் சொல்லப்படுவதுண்டு.
1998ஆம் ஆண்டு அக்டோபர் மாதம்ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரின் கன்கானி பகுதியில் படப்பிடிப்புக்காக வந்த சல்மான் கான் உள்ளிட்ட நடிகர்கள், மான்களை வேட்டையாடுவதை பூனம்சந்த் பிஸ்னோயி என்பவர்தான் முதலில் பார்த்தார். இரண்டு மான்கள் கொல்லப்படுவதைக் கண்ட அவர், தனது சமுதாயம் சார்ந்த அகில பாரதிய பிஸ்னோயி மகாசபை என்ற அமைப்பின் மூலம் வழக்கு தொடர்ந்தார். ஏற்கெனவே, சல்மான் கான் சின்காரா வகை மானைக் கொன்றதாகவும் சல்மான் கான் மீது இவர்கள் தொடர்ந்த வழக்கில், அவர் விடுதலைசெய்யப்பட்டார்.
எந்தவித பிரபலமத் தன்மையும் இல்லாமல், கடந்த 20 ஆண்டுகளாக விடாப்பிடியாக சட்டப்போராட்டம் நடத்தி, குற்றம்சாட்டப்பட்ட சல்மான் கானுக்கு தண்டனையும் பெற்றுத் தந்திருக்கின்றனர் பிஸ்னோயிக்கள். மேலும், விடுதலை செய்யப்பட்ட நால்வரின் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்போவதாகவும் அறிவித்துள்ளனர். 20 ஆண்டுகால போராட்டத்தையும், காத்திருப்பையும் இன்று வழங்கப்பட்ட தீர்ப்பிற்குப் பின்னர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி வெளிப்படுத்தியிருக்கின்றனர் இந்த பிஸ்னோயிக்கள்.