ADVERTISEMENT

“மோடி ஆட்சியில் அறிவிக்கப்படாத அவசர நிலை அமலில் உள்ளது” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

03:26 PM Mar 31, 2024 | prabukumar@nak…

டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், அதில் 100 கோடி ரூபாய் கைமாறியதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் டெல்லியின் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். இந்த வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும், அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார்.

ADVERTISEMENT

இது தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த 21 ஆம் தேதி (21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாதென உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும் முன் ஜாமீன் வழங்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்திருந்தது. இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு அன்றைய தினமே (21.03.2024) 12 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் வருகை தந்து அரவிந்த கெஜ்ரிவாலிடம் விசாரணையும், அவரது வீட்டில் சோதனையும் மேற்கொண்டனர். அதன் பின்னர் அமலாக்கத்துறையால் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு அமலாக்கத்துறை காவலில் இருந்து வருகிறார்.

ADVERTISEMENT

இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து டெல்லி ராம்லீலா மைதானத்தில் இந்தியா கூட்டணி சார்பில் இன்று (31.03.2024) ஜனநாயகத்தை காப்போம் என்ற பெயரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வரும், ஜம்மு -காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான ஃபரூக் அப்துல்லா, பீகார் மாநில முன்னாள் துணை முதல்வரும் ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சியின் தலைவருமான தேஜஸ்வி யாதவ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. டெரெக் ஓ பிரையன், தி.மு.க. சார்பில் திருச்சி சிவா எம்.பி., ஜார்கண்ட் மாநில முதல்வர் சம்பாய் சோரன், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவரும், ஜார்கண்ட் முன்னாள் முதல்வருமான ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் சரத்பவார், டி.ராஜா, சீதாராம் யெச்சூரி, சுனிதா கெஜ்ரிவால் என 20க்கும் மேற்பட்ட கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த கூட்டத்தில் தி.மு.க. சார்பில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையை திருச்சி சிவா எம்.பி. வாசித்தார். அப்போது, “கெஜ்ரிவாலின் பிரச்சாரம் மக்களை அதிக அளவில் கவரும் என்பதால் தான் பா.ஜ.க. அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. சி.பி.ஐ., வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறையை மத்திய பா.ஜ.க. அரசு தவறாக பயன்படுத்துகிறது. மோடி ஆட்சியில் இந்தியா முழுவதும் அறிவிக்கப்படாத அவசர நிலை அமலில் உள்ளது. தேர்தல் தோல்வி பயம் காரணமாகவே அடுத்தடுத்து எதிர்க்கட்சித் தலைவர்களை மத்திய பா.ஜ.க. அரசு கைது செய்து வருகிறது” எனத் தெரிவித்தார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT