Ukraine:

Advertisment

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்ததன் காரணமாக உக்ரைனில் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில், புதுச்சேரியிலிருந்து நால்வர், காரைக்காலில் இருந்து நால்வர் என மொத்தம் 8 மாணவர்கள் மருத்துவம் படிக்க உக்ரைன் சென்றுள்ளது தெரியவந்ததையடுத்து அந்த மாணவர்கள் வீடு திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்களின் பெற்றோர் முதல்வர் ரங்கசாமியிடம் கோரிக்கை வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து அந்த மாணவர்களின் விவரங்கள் அடங்கிய பட்டியலை புதுச்சேரி அரசு மத்திய அரசுக்கு அனுப்பியது. இந்த விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் ரங்கசாமி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், உக்ரைன் நாட்டிலுள்ள இந்தியாவுக்கான தூதர் ஆகியோரை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, 'உக்ரைனில் உள்ள புதுச்சேரி மாணவர்களை பத்திரமாக மீட்டு புதுச்சேரிக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். மேலும் இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் ரங்கசாமி கடிதம் மூலம் கோரிக்கை வைத்தார்.

இதுகுறித்து புதுச்சேரி அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 'உக்ரைனில் உள்ள புதுச்சேரி மாணவர்களிடம், முதல்வர் அலுவலக அதிகாரிகள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி வருகின்றனர். அப்போது அவர்கள் மாணவர்களை நலத்தையும் பாதுகாப்பையும் விசாரித்தனர். மேலும் உக்ரைனிலிருந்து மாணவர்களை மீட்க முதல்வர் மத்திய அரசிடம் பேசுவதையும் அதற்கான நடவடிக்கை முழுவீச்சில் இருப்பதையும் தெரிவித்து நம்பிக்கை ஊட்டினர்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

Advertisment

இந்த நிலையில், நேற்று புதுச்சேரியில் 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து போடும் சிறப்பு முகாமை முதலமைச்சர் ரங்கசாமி கதிர்காமம் தில்லையாடி வள்ளியம்மை அரசு உயர்நிலைப் பள்ளியில் தொடங்கி வைத்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, "உக்ரைனில் உள்ள புதுச்சேரி மாணவர்களை பத்திரமாக மீட்டு வர புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அவர்களை அழைத்து வருவதற்கான முழு செலவையும் புதுச்சேரி அரசு ஏற்றுக்கொள்ளும். பிள்ளைகள் பத்திரமாக இருக்கிறார்கள். அவர்களை தொடர்பு கொள்வதற்கான நடவடிக்கை எடுத்துள்ளோம். மாணவர்களை பத்திரமாக மீட்க வேண்டும் என பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளோம்" என்றார்.