/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/nirav modi23.jpg)
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் வைர வியாபாரி நீரவ் மோடி. வைர வியாபாரத்தில் கொடிகட்டிப் பறந்த தொழிலதிபர். பஞ்சாப் நேஷனல் வங்கியில் 14 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் நீரவ் மோடி சிக்கினார். அவர் மீது அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்யத் துடித்தனர்.
இதனையறிந்த அவர், சிபிஐ அதிகாரிகளுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு ஹாயாக லண்டனுக்கு பறந்தார். பிரிட்டனில் நீரவ் மோடி பதுங்கியிருப்பதை மோப்பம் பிடித்த மத்திய மோடி அரசு, நீரவ் மோடியை கைது செய்து இந்தியாவுக்கு இழுத்து வரும் முயற்சிகளில் குதித்தது. இதற்காக இண்டர்போலின் உதவியையும் நாடியது மத்திய அரசு. மேலும், பிரிட்டன் அரசுக்கு கோரிக்கையையும் வைத்திருந்தனர்.
இந்த நிலையில், பிரிட்டனில் கைது செய்யப்பட்ட நீரவ் மோடி, லண்டன் சிறையில் அடைக்கப்பட்டார். அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சனிடம் தொடர் வலியுறுத்தல்களை செய்து வந்தது மத்திய உள்துறை அமைச்சகம். மேலும், இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும் என்கிற வழக்கையும் தொடுத்தது மத்திய அரசு.
லண்டனில் உள்ள வெஸ்ட் மின்ஸ்டர் நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கில், நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்தும் உத்தரவை அண்மையில் வழங்கியது நீதிமன்றம். இதனால், எந்த நேரத்திலும் அவர் நாடு கடத்தப்படுவார் என்கிற சூழல் இருந்தது. ஆனால், நீதிமன்றத்தின் உத்தரவு மீது எந்த முடிவையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தது பிரிட்டன் அரசின் மத்திய உள்துறை அமைச்சகம். இந்த கால தாமதம் குறித்து பிரிட்டன் அரசுக்கும் நினைவுபடுத்திக் கொண்டே இருந்தது இந்தியா.
இந்த நிலையில், இந்த மாதம் இந்தியாவுக்கு வரவிருக்கிறார் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன். அவரது இந்தியப் பயணம் உறுதி செய்யப்பட்டிருப்பதால், நீரவ் மோடி தொடர்பான பிரச்சனையில் இந்தியாவின் வலியுறுத்தல்களைக் கவனத்தில் எடுத்திருக்கிறது பிரிட்டன் அரசு. இதனையடுத்து, நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்த அனுமதித்து அது தொடர்பான உத்தரவைப் பிறப்பித்துள்ளது பிரிட்டன் உள்துறை அமைச்சகம்.14 ஆயிரம் கோடி மோசடி மன்னனான நீரவ் மோடி விரைவில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படவிருக்கிறார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)