UGC NET Exam Postponement  National testing Agency Announcement

யுஜிசி - நெட் தேர்வு (UGC - NET) அட்டவணையில் 30 பாடங்களுக்கான தேர்வுகள் ஜனவரி 15, 16 தேதிகளில் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்து. அதே சமயம் தமிழகத்தில் ஜனவரி 14 அன்று பொங்கல், ஜனவரி 15 திருவள்ளுவர் தினம், ஜனவரி 16 உழவர் திருநாள் எனத் தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை நாட்கள் ஆகும். இத்தகைய சூழலில் தான் பொங்கல் அன்று நடைபெற இருந்த யுஜிசி - நெட் தேர்வின் தேதியை மாற்ற வேண்டும் என மதுரை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் கோரிக்கை விடுத்து இருந்தார்.

இது தொடர்பாக அவர் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கும், தேசிய தேர்வு முகமை பொது இயக்குநர் பிரதீப் சிங் கரோலாவுக்கும் கடிதங்களை எழுதியிருந்தார். அதே போன்று யூ.ஜி.சி. நெட் தேர்வை, பொங்கல் திருநாள் நாட்களில் நடத்தப்படுவதை மாற்றியமைத்திட வலியுறுத்தி மத்திய கல்வி அமைச்சருக்கு, தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் கடிதம் எழுதியிருந்தார்.

அதன் தொடர்ச்சியாகத் தமிழகத்தில் தைப்பொங்கல் கொண்டாடும் நாட்களில் தேசிய தேர்வு முகமையால் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள யு.ஜி.சி. நெட் தேர்வுகளை வேறொரு நாளுக்கு மாற்றியமைக்கக் கோரிக்கை விடுத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில் பொங்கல் (15.01.2025) அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்ட யு.ஜி.சி. நெட் தேர்வு மட்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கான மாற்றுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனத் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. அதே சமயம் மற்ற தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.