பல்கலைக்கழகத்திற்கு துணை வேந்தரை நியமிப்பதற்கான தேடுதல் குழுவில் ஆளுநர் பரிந்துரைப்பவரும், உறுப்பினராக யூ.ஜி.சி பரிந்துரைப்பவரும் இருப்பார்கள் எனவும் மற்றொரு உறுப்பினராக, பல்கலைக்கழக உறுப்பினர் பரிந்துரைப்பவர் இருப்பார் எனவும் யூ.ஜி.சி புதிய விதியை கொண்டுவந்துள்ளது. இந்த புதிய விதிமுறையால் மாநில அரசு பரிந்துரைக்கும் உறுப்பினர் இனி இடம்பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு சமீபத்தில் வெளியிட்ட வரைவு நெறிமுறைகளைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
யுஜிசி திருத்தங்களுக்கான நடவடிக்கைகளுக்கு தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. யூஜிசியின் புதிய திருத்தங்கள், வரைவுகள் மாநில அரசின் கல்விக் கொள்கைக்கு எதிராக இருக்கிறது எனவும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.
யுஜிசி திருத்தங்களுக்கான நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று திமுக தலைமையில் டெல்லியில் போராட்டம் நடைபெற்றது. அதில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட பலர்கலந்து கொண்டனர். இந்நிலையில் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் விரிவான விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.
அந்த விளக்கத்தில்,' யுஜிசி என்பது ஒரு தன்னாட்சி பெற்றிருக்கக்கூடிய ஒரு அமைப்பு. அவர்களுடைய இந்த புதிய விதிமுறைகள், திருத்தம் தொடர்பான நடவடிக்கை என்பது அரசியலாக்கப்படுகிறது. அரசியல் கட்சித் தலைவர்கள் குழப்பத்தை ஏற்படுத்த விரும்புகிறார்கள். ராகுல் காந்தி உள்ளிட்டோர் ஒருபோதும் இந்தியாவை பற்றி முழுமையாக புரிந்து கொள்ளவில்லை. காங்கிரஸ், திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்களுக்குமுழுமையான வரலாறு என்பது தெரியவில்லை. தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக எதிர்க்கட்சிகள் செயல்படுகின்றன' என தெரிவித்துள்ளார்.
மேலும் யுஜிசி வரைவு விதிமுறைகள் தொடர்பான கருத்து கூறுவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 28 ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.