Tvk executives who entered house Congress party members beating them

புதுச்சேரி பூமியான் பேட்டை மாரியம்மன் கோவில் தெருவில் சிவபெருமாள் (47) என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு சிவபிரகாஷ், சூரியமூர்த்தி என இரண்டு மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில் இன்று அதே பகுதியைச் சேர்ந்த தமிழக வெற்றி கழக நிர்வாகி அருள் பாண்டி (எ)அருள் விஜய் என்பவரின் ஆதரவாளர்கள் அருள் குமார் சாரங்கபாணி, முரளி, சஞ்சய், ரவி, சர்வின், விஜய பாரதி, கணேஷ் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்டோர் சிவபிரகாஷ் வீட்டுக்குள் புகுந்து அவரது தம்பி சூரியமூர்த்தி, தந்தை சிவபெருமாள் ஆகியோரை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். பின்பு அங்கிருந்த பொருட்களை அடித்து உடைத்த அவர்கள், அங்கிருந்த காங்கிரஸ் கட்சியின் கொடிகளை ரோட்டில் வீசி சேதப்படுத்தி விட்டு சிவபிரகாஷ் குடும்பத்திற்குக் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இந்த காட்சிகள் அங்குப் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியது. இதில் பலத்த காயம் அடைந்த சிவபிரகாஷ் மற்றும் அவரது தம்பி புதுச்சேரி கதிர்காமம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக அவர்களது தந்தை சிவபெருமாள் ரெட்டியார்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

Advertisment

அதன்பேரில் போலீசார் விசாரணை செய்ததில் காங்கிரஸ் கட்சியில் இருக்கும் சகோதரர்கள் தொடர்ந்து சில நலத்திட்ட உதவிகள் செய்து வந்ததும், அதற்கு பேனர்கள் தொடர்பாக ஏற்கனவே முன்விரோதம் இருந்துவந்த நிலையில், சிவபிரகாஷ் தரப்பினர் அருள் விஜய் தரப்பினர் ஒட்டியுள்ள போஸ்டர்கள் மீது போஸ்டர் ஒட்டியதால் ஆத்திரம் அடைந்த த.வெ.க நிர்வாகி அருள் விஜய் தனது ஆதரவாளர்களுடன் வீடு புகுந்து தாக்கியது தெரியவந்தது.

இது தொடர்பாக அருள் விஜய் உட்பட 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் அருளை கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மற்றவர்களைத் தேடி வருகின்றனர்.