Skip to main content

டி.டி.வி.தினகரனுக்கு அமலாக்கத்துறை சம்மன்!

Published on 17/04/2022 | Edited on 17/04/2022

 

 TTV Dinakaran summoned again!

 

டெல்லி அமலாக்கத்துறை டி.டி.வி.தினகரனுக்கு மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.

 

இரட்டை இலைச் சின்னத்தைப் பெற தேர்தல் ஆணையத்தின் அதிகாரி ஒருவருக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறப்படும் விவகாரத்தில், சட்ட விரோதப் பணப்பரிவர்த்தனைத் தொடர்பாக, டெல்லியில் உள்ள மத்திய அமலாக்கத்துறையின் அலுவலகத்தில் கடந்த 12/04/2022 ஆம் தேதி பகல் 12.00 மணியளவில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நேரடியாக ஆஜரானார். அவருடன், இந்த விவகாரத்தில் இடைத்தரகராகச் செயல்பட்ட சுகேஷ் சந்திரசேகரும், அமலாக்கத்துறையில் ஆஜராக்கப்பட்டு, இருவரையும் ஒன்றாக அமர வைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இந்த வழக்கில்  கடந்த 12/04/2022  ஆம் தேதி மதியம் 12 மணி முதல் இரவு 11 மணி வரை தினகரனிடம் அமலாக்கத்துறை மொத்தம் சுமார் 11 மணி நேரம் விசாரணை மேற்கொண்டது. விசாரணைக்கு பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த டி.டி.வி.தினகரன், ''சுகேஷ் சந்திரசேகரன் ஒவ்வொருமுறை வரும்பொழுது ஒவ்வொரு வாக்குமூலம் கொடுப்பதால் அமலாக்கத்துறை கேள்விகளை என்னிடம் கேட்கிறது. கேட்பது அவர்களின் கடமை'' என்றார். "இதற்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. இந்த வழக்கில் நான் சொல்ல விரும்புவது நான் நிரபராதி.. நான் எந்த தப்பும் செய்யல... யாரோ கொடுக்கும் ஸ்டேட்மென்ட்டுக்காக என்னை கூப்பிட்டு விசாரிக்கும் கட்டாயம் அமலாக்கத்துறைக்கு இருக்கு. எனவே கூப்பிட்டு விசாரிக்கிறார்கள்'' என்று கூறியிருந்தார்.

 

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு நேரில் வரும் ஏப்ரல் 21 ஆம் தேதி ஆஜராகும்படி தினகரனுக்கு டெல்லி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விவிபேட் தொடர்பான வழக்கு; உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case related to VVPAT Judgment in the Supreme Court today

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதைக் காட்டும் ஒப்புகைச் சீட்டையும் (V.V.P.A.T. - Voter verified paper audit trail) 100 சதவீதம் எண்ண வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தைப் பற்றி பல்வேறு கேள்விகளை நீதிபதிகள் எழுப்பி இருந்தனர்.

அதாவது இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா மற்றும் திபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று முன்தினம் (24.04.2024) விசாரணைக்கு வந்தபோது தேர்தல் ஆணையத்திற்கு பல்வேறு கேள்விகளை முன்வைத்திருந்தனர். இந்த வழக்கு விசாரணையின் போது, “தேர்தல் நடக்கும் முறை குறித்து எந்தவொரு சந்தேகமும் அச்சமும் இருக்க கூடாது. ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்த தகவல்களில் ஏன் முரண்பாடுகள் உள்ளன. கண்ட்ரோலிங் யூனிட்டில் மைக்ரோ கண்ட்ரோலர் நிறுவப்பட்டுள்ளதா? அல்லது விவிபேட்டில் உள்ளதா?. மைக்ரோ கண்ட்ரோலர் கருவி ஒருமுறை மட்டுமே மென்பொருளை பதிவேற்றம் செய்யக் கூடியதா?. கண்ட்ரோல் யூனிட் மட்டும் சீல் வைக்கப்படுமா? விவிபேட் இயந்திரம் தனியாக வைத்திருக்கப்படுமா? மைக்ரோ கண்ட்ரோலர் என்பது ஒருமுறை மட்டும் புரோகிராம் செய்யக்கூடியதா?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பி இருந்தனர். 

Case related to VVPAT Judgment in the Supreme Court today

மேலும், ‘ஒப்புகைச் சீட்டு விவகாரத்தில் சில சந்தேகங்கள் உள்ளன’ என நீதிபதி சஞ்சீவ் கண்ணா தெரிவித்திருந்தார். இதனையடுத்து சம்பந்தப்பட்ட தேர்தல் ஆணைய அதிகாரி  ஆஜராக வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போது விவிபேட் இயந்திரம் தொடர்பாக தங்களுக்கு எழுந்துள்ள தொழில்நுட்ப சந்தேகங்கள் குறித்து ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். இதனையடுத்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்கையில், “மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், விவிபேட், கட்டுப்பாட்டுக் கருவிகளில் தனித்தனி மைக்ரோ கண்ட்ரோலர்கள் உள்ளன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் உள்ள மைக்ரோ கண்ட்ரோலர்களில் எந்த மாற்றமும் செய்ய முடியாது.

தேர்தல் முடிந்த பிறகு இந்த மூன்று கருவிகளும் சீல் வைக்கப்படும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் செய்யப்பட்டுள்ள புரோகிராம்களை மாற்ற முடியாது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னம் பொருத்துவதற்காக 4 ஆயிரத்து 800 கருவிகள் உள்ளன. அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள தகவல்கள் 45 நாட்கள் பாதுகாத்து வைக்கப்படும். 46ஆவது நாளில் உயர்நீதிமன்றத்தை தொடர்புகொண்டு வழக்குகள் ஏதும் தொடரப்பட்டுள்ளதா என கேட்டறியப்படும். அப்போது தேர்தல் தொடர்பான வழக்குகள் தொடரப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்ட தகவல்கள் பாதுகாத்து வைக்கப்படும்.” எனத் தெரிவித்தனர். 

Case related to VVPAT Judgment in the Supreme Court today

இதனையடுத்து, “தேர்தல்களில் முறைகேடு நடந்ததாக இதுவரை எந்த ஆதாரமும் தரப்படவில்லை. அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் கிடைத்துள்ளது” எனத் தெரிவித்து இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்திருந்தனர். இந்நிலையில் விவிபேட் எந்திரத்தில் பதிவாகும் 100 சதவித ஒப்புகைச்சீட்டுகளையும் எண்ண உத்தரவிடக்கோரிய மனு மீது உச்சநீதிமன்றம் இன்று (26.04.2024) தீர்ப்பு வழங்குகிறது. 

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.