'Truth has no place in Modi's world' - Rahul comments

நேற்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி மற்றும் பாஜக உறுப்பினர்கள் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. நீட் தேர்வு, அக்னி வீரர் திட்டம், பணமதிப்பிழப்பு உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் குறித்து ராகுல்காந்தி பாஜகவுக்கு கேள்வி எழுப்பி இருந்தார். அதேபோல் பாஜகவினர் உண்மையான இந்துக்கள் அல்ல. உண்மையான இந்துக்கள் வெறுப்பு, வன்மம் ஆகியவற்றை தூண்ட மாட்டார்கள். ஆனால் பாஜகவினர் வெறுப்பை விதைக்கிறார்கள். 24 மணி நேரமும் பாஜகவினர் வெறுப்பை விதைத்து வருகின்றனர். பாஜகவும், பிரதமர் மோடியும் இந்துக்களின் ஒட்டுமொத்த பிரதிநிதி அல்ல' என பல்வேறு குற்றச்சாட்டுகளை சாரம்சமாக வைத்து ராகுல் காந்தி உரையாற்றியிருந்தார். அதேநேரம் இந்துக்கள் குறித்த பேச்சுக்கு ராகுல் மன்னிப்பு கேட்கவேண்டும் என வலியுறுத்திய பாஜக எம்பிக்கள், ராகுலின் கேள்விகளுக்கு பதிலளித்ததோடு கண்டங்களையும் தெரிவித்தனர். இதனால் நாடாளுமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இப்படி காரசாரமான விவாதங்கள், பதில்கள் நாடாளுமன்றத்தில் நிகழ்ந்ததால் என்றும் இல்லாத அளவுக்கு நள்ளிரவு வரை மக்களவையில் விவாதம் நடைபெற்றது. இன்று நடைபெறும் நிகழ்வில் நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி இன்று பிற்பகலுக்குப் பிறகு உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசியதில் சில பகுதிகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்துக்கள் குறித்தும் பிரதமர் மோடி குறித்தும் பேசிய சில பகுதிகள் அவைக்குறிப்பில் இடம் பெறவில்லை. அதேபோல் பாஜக, ஆர்.எஸ்.எஸ் ஆகியவை குறித்து ராகுல் முன்வைத்த விமர்சனங்களும் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

'Truth has no place in Modi's world' - Rahul comments

Advertisment

இந்நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்பிக்கள் ராகுலின் சில உரைகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டு வருகின்றனர். தொடர்ந்து நாடாளுமன்றத்தின் வெளியே செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி 'மோடியின் உலகத்தில் உண்மைக்கு இடமில்லை. அவைக்குறிப்பில் இருந்து எதனை வேண்டுமானாலும் நீக்கலாம் உண்மையை நீக்க முடியாது. உண்மையில் உண்மையை யாராலும் எப்போதும் நீக்க முடியாது' எனத்தெரிவித்துள்ளார்.