/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/WhatsApp Image 2023-08-11 at 4.29.59 PM_20.jpeg)
மும்பை குர்லா பகுதியில் உள்ள சாந்தி நகரில் மெட்ரோ பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பகுதியில் அமைந்துள்ள சி.எஸ்.டி. சாலையிலும், மெட்ரோ பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், கடந்த 20ம் தேதி காலையில் இருந்தே சி.எஸ்.டி. சாலையின் ஓரத்தில், சூட்கேஸ் ஒன்று கேட்பாரற்றுக் கிடந்துள்ளது. அதனைக் கவனித்த அங்கிருந்தவர்கள் உடனடியாக போலீசாருக்குத் தகவல் அளித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, அங்கு வந்த போலீசார் அந்த சூட்கேஸை எடுத்து திறந்து பார்த்துள்ளனர். அப்போது அதில், ஓர் இளம்பெண்ணின் சடலம் கிடந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், அந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாகக் கொலை வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரித்து வந்தனர்.
இதையடுத்து, இறந்த பெண் யார்? எப்படி கொலை செய்யப்பட்டார்? கொலை செய்தது யார்? கொலைக்கான காரணம் என்ன? உள்ளிட்டவை கண்டுபிடிக்க சூட்கேஸ் கிடந்த இடத்தில் இருக்கும் சி.சி.டி.வி. காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வந்தனர். மேலும், பிணமாக மீட்கப்பட்ட பெண்ணின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து அவரை அடையாளம் காணும் முயற்சியிலும் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், பெண் ஒருவர் போலீசாரை தொடர்பு கொண்டு, பிணமாக மீட்கப்பட்டவர் தனது சகோதரி என போலீசாரிடம் தெரிவித்தார். இதையடுத்து, அவரிடம் நடத்திய விசாரணையில், பிணமாக மீட்கப்பட்டவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பிரதிமா கிஸ்பட்டா (25) என்பது தெரியவந்தது. மேலும், அவர் அதே மாநிலத்தைச் சேர்ந்த காதலன் அக்சர் மனோஜ் (21). என்பவருடன் தாராவி குடிசைப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஒன்றாக வசித்து வந்ததும் போலீசாருக்கு தெரியவந்தது.
இதனையடுத்து, அக்சர் மனோஜை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதில் தானே பகுதியில் பதுங்கி இருந்த அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், பிணமாக கிடந்த பிரதிமா கிஸ்பட்டா வீட்டு வேலை செய்து வந்துள்ளார். அக்சர் மனோஜ் இனிப்பு கடை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில், இவர்கள் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதனிடையே, இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலே ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், காதலி பிரதிமா கிஸ்பட்டா நடத்தையில் அக்சர் மனோஜுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக கடந்த 18ஆம் தேதி 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அக்சர் மனோஜ், காதலியின் கழுத்தை நெறித்துக் கொன்று அதன் உடலை சூட்கேசில் அடைத்துள்ளார். அதன் பின்னர், அந்த சூட்கேஸை எடுத்துக் கொண்டு ஆட்டோ பிடித்து ஏறி உடலை சாலையோரம் வீசி விட்டு தப்பி சென்றுள்ளார் என்பது தெரியவந்தது. கைதான அசோக் மனோஜிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)