Truck drivers protest temporarily withdrawn

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சியங்கள் சட்டம் என 3 குற்றவியல் சட்டங்கள் கடந்த டிசம்பர் 25 ஆம் தேதி வரை அமலில் இருந்தன. இவற்றுக்கு மாற்றாக 3 புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு உருவாக்கியது. அதன்படி, நாடாளுமன்றத்தில் 3 குற்றவியல் மசோதாக்கள் இந்தியில் தாக்கல் செய்யப்பட்டன. அதில், இந்திய தண்டனைச் சட்டம் என்பதை பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் எனவும், குற்றவியல் நடைமுறை சட்டம் என்பதை பாரதிய நாகரிக் சுரக்‌ஷ சன்ஹிதா எனவும், இந்திய சாட்சியங்கள் சட்டம் என்பதை பாரதிய சாக்சியா எனவும் பெயர் மாற்றம் செய்யப்பட்ட 3 மசோதாக்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். இந்த மசோதாக்கள் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டு ஒப்புதல் அளித்திருந்தார். இதனையடுத்து 3 புதிய குற்றவியல் மசோதாக்களும் கடந்த 25 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன.

Advertisment

அதே சமயம் பாரத நியாய சன்ஹிதா என்ற பெயரில் புதிதாக கொண்டு வரப்பட்ட புதிய குற்றவியல் சட்டத்தில் விபத்தால் மரணம் ஏற்பட்டால் ஓட்டுநர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதாவது ஹிட் அண்ட் ரன் (Hit and Run) வழக்கில் சிக்கும் ஒட்டுநர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், கவனக்குறைவாக வாகனத்தை ஓட்டி உயிரிழப்பு ஏற்படுத்தினால் ஒட்டுநர்களுக்கு 5 ஆண்டுகள் சிறை என இச்சட்டம் கூறுகிறது. எனவே விபத்து தொடர்பான இந்த விதிமுறைக்கு ஓட்டுநர்கள் எதிர்ப்பு தெரிவித்து உத்திரப்பிரதேசம், மஹாராஷ்ட்ரா, பஞ்சாப், பீகார், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்களில் கார், பேருந்து, லாரி ஒட்டுநர்கள் முக்கிய சாலைகளை முடக்கி நேற்று (01.01.2024) முதல் போராட்டம் நடத்தி வந்தனர். இதனால் அத்தியாவசியப் பொருட்கள் சேவையிலும் தடைப்பட்டிருந்தது. மேலும் குஜராத், உத்திரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஓட்டுநர்கள் மற்றும் காவல்துறையினர் இடையே மோதல் சம்பவங்களும் நிகழ்ந்தன.

Advertisment

இதனையடுத்து புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் லாரி ஒட்டுநர்களுடன் மத்திய அரசு இரவு 7 மணியளவில் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தையில் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் நிர்வாகிகளுடன், மத்திய அரசு சார்பில் உள்துறை செயலாளர் அஜய்குமார் பல்லா பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கும் ஹிட் அண்ட் ரன் சட்டப்பிரிவை தற்காலிகமாக நிறுத்தி வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர். இதனால் லாரி ஓட்டுநர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளதாக லாரி ஒட்டுநர்கள் தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆலோசனை கூட்டம் நடைபெறும் வரையில் இந்த சட்டம் அமல்படுத்தப்படாது என மத்திய அரசு உறுதியளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.