Trouble in India's alliance at Lok Sabha Elections

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது . இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தை பொறுத்தவரை தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள், தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

Advertisment

இந்த மக்களவை தேர்தலில், பா.ஜ.கவை வீழ்த்துவதற்காக கடந்த ஆண்டு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியை உருவாக்கின. இந்த இந்தியா கூட்டணியில், காங்கிரஸ், ஆம் ஆத்மி, தி.மு.க, திரிணாமுல் காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி (என்.சி), மக்கள் ஜனநாயகக் கட்சி (பி.டி.பி), சமாஜ்வாதி கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றன.இதற்கிடையில், இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, மேற்கு வங்கத்தில் உள்ள 42 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது. இது காங்கிரஸ் கட்சியினருக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. தொகுதி பங்கீடு குறித்து தொடர்ந்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்த காங்கிரஸுக்கு மேலும் அதிர்ச்சி தரும் வகையில், மேற்கு வங்கத்தில் 42 தொகுதியில் போட்டியிடும் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்களை மம்தா பானர்ஜி அதிரடியாக அறிவித்தார்.

Advertisment

அதனை தொடர்ந்து, 13 மக்களவைத் தொகுதிகள் கொண்ட பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஆம் ஆத்மி கட்சி, அம்மாநிலத்தில் மட்டும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது. இது இந்தியா கூட்டணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது. இந்த நிலையில், ஜம்மு காஷ்மீரில் உள்ள 5 மக்களவைத் தொகுதிகளை பிரிப்பது தொடர்பாக இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேசிய மாநாட்டு கட்சிக்கும், மக்கள் ஜனநாயகக் கட்சிக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது.

அதில் குறிப்பாக, காஷ்மீரில் உள்ள 3 மக்களவைத் தொகுதிகளிலும் போட்டியிடுவதை மக்கள் ஜனநாயகக் கட்சி தவிர்க்க வேண்டும் என்ற தேசிய மாநாட்டு கட்சி துணைத்தலைவர் உமர் அப்துல்லா தெரிவித்திருந்தார். இது மக்கள் ஜனநாயகக் கட்சிக்கும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், இந்தியா கூட்டணிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் காஷ்மீரில் தனித்து போட்டியிடுவதாக மக்கள் ஜனநாயகக் கட்சி அறிவித்துள்ளது.

Advertisment

Trouble in India's alliance at Lok Sabha Elections

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் மொத்தம் 5 மக்களவை தொகுதிகள் உள்ளன. இதில், காஷ்மீர் பிராந்தியத்தில் உள்ள 3 மக்களவைத் தொகுதிகளில் தனித்து போட்டியிடப்போவதாக தேசிய மாநாட்டு கட்சி அறிவித்துள்ளது. இது குறித்து மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான மெகபூபா முப்தி தெரிவித்துள்ளதாவது, “மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு எங்கேயும் ஆதரவு இல்லை என்றும், 2019ஆம் ஆண்டு தேர்தலின் கட்சி 4வது இடத்திற்கு தள்ளப்பட்டதாகவும் உமர் அப்துல்லா தெரிவித்திருந்தார். அவரது இந்த கருத்து மிகவும் கடுமையானது.

மேலும், காஷ்மீர் பிராந்தியத்தில் உள்ள 3 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக தேசிய மாநாட்டு கட்சி தன்னிச்சையாக அறிவித்துள்ளது. எனவே, மக்கள் ஜனநாயகக் கட்சி மக்களவைத் தேர்தலின் வேட்பாளர்களை அறிவித்து போட்டியிடுவதை தவிர வேறு வழியில்லாத சூழலை தேசிய மாநாட்டு கட்சி ஏற்படுத்திவிட்டது. எனவே, இந்த பிராந்தியத்தில் உள்ள 3 தொகுதியிலும் எங்கள் கட்சி தனித்து போட்டியிடும். வேட்பாளர்களை கட்சியின் நாடாளுமன்ற குழு இறுதி செய்து விரைவில் அறிவிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.