Skip to main content

மிஷன் 2024: காங். உடனான கூட்டணயில் சலசலப்பை ஏற்படுத்திய திரிணாமூல் காங். நாளேடு!

Published on 18/09/2021 | Edited on 18/09/2021

 

mamata - rahul

 

இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் 2024ஆம் ஆண்டு நடைபெற இருக்கிறது. ஆனால், அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளைத் தற்போதே தொடங்கிவிட்டன. பாஜகவிற்கு எதிராக காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், திமுக, தேசிய மாநாட்டுக் கட்சி என பல்வேறு கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. இந்தநிலையில், எதிர்க்கட்சிகளின் இந்தக் கூட்டணிக்குள் சிக்கலை ஏற்படுத்தும் வகையில் திரிணாமூல் காங்கிரஸின் அதிகாரப்பூர்வ பத்திரிகை ஜாகோ பங்களா கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.

 

மேற்கு வங்க முதல்வர் மம்தாவிற்கு பிரதமர் பதவி மீது கண் இருப்பதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில் காங்கிரஸ், ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தலாம் என கருதப்படுகிறது. இதனால் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

 

இந்தச் சூழலில் ஜாகோ பங்களாவில் 'ராகுல் காந்தி தோற்றுவிட்டார், மம்தாவே மாற்று' என வெளியாகியுள்ள அந்தக் கட்டுரையில், "காங்கிரஸ் இல்லாத பாஜக எதிர்ப்பு கூட்டணி பற்றி நாங்கள் ஒருபோதும் விவாதிக்கவில்லை. ஆனால் மோடிக்கு மாற்றாக ராகுல் காந்தி இன்னும் உருவாகவில்லை. மம்தா பானர்ஜி நாட்டிற்கான மாற்று முகம். அந்த மாஸ் லீடரை (மம்தாவை) மாற்றாக முன்வைத்து நாடு முழுவதும் பிரச்சாரம் செய்யத் தொடங்குவோம்" என கூறப்பட்டுள்ளது.

 

மேலும் அந்தக் கட்டுரையில், "ராகுல் காந்திக்கு பல சந்தர்ப்பங்களில் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவர் தோல்வியடைந்துவிட்டார். மாற்று கூட்டணி காங்கிரசுடன் ஏற்படுத்தப்படும். ஆனால் பிரச்சாரத்திற்கு வலுவான ஒரு முகம் இருக்க வேண்டும். அந்த முகம் மம்தா பானர்ஜி" என கூறப்பட்டுள்ளது.

 

அதை தொடர்ந்து, "நாடு மாற்று ஒன்றைத் தேடிவருகிறது. எனக்கு ராகுல் காந்தியை நீண்டகாலமாக தெரியும். ஆனால் அவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு மாற்று முகமாக உருவாக தவறிவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் மோடிக்கு மாற்று முகமாக மம்தா பானர்ஜி வெற்றி பெற்றுள்ளார்" என திரிணாமூல் காங்கிரஸின் மக்களவை தலைவர் சுதீப் பந்தோபாத்யாய் கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இந்தக் கட்டுரை அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கட்டுரையினால் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்குள் சிக்கல் ஏற்படலாம் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இதற்கிடையே இந்தக் கட்டுரை குறித்துப் பேசியுள்ள காங்கிரஸ் மக்களவை தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்திரி, "மாற்று முகமாக யார் வெற்றிபெற்றுள்ளார், யார் வெற்றிபெறவில்லை என்ற விவாதத்தில் ஈடுபடமாட்டோம். இது 2021தான். மக்களவைத் தேர்தல் 2024இல்தான் நடைபெற உள்ளது. 2014 முதல் மோடி அரசுக்கு எதிராக ராகுல் காந்தி நிலையான எதிர்க்கட்சித் தலைவராக இருந்துவருகிறார்" என தெரிவித்துள்ளார்.

 

மேலும் அவர், "ஒரு கூட்டணி உருவாகும்போது, கூட்டணியை யார் வழிநடத்துவது என்பது குறித்து அனைவரும் ஒருமனதாக முடிவெடுப்பார்கள் என்றே இந்திய அரசியல் வரலாறு தெரிவிக்கிறது. எனவே அதுவரை நிறைய கருத்துகள் வரும். ஆனால் அவையெல்லாம் இறுதி முடிவல்ல" என கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அமேதி தொகுதியில் மீண்டும் போட்டி?; மெளனம் கலைத்த ராகுல் காந்தி

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Rahul Gandhi broke the silence and answered Re-contest in Amethi constituency?

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது.

அதே வேளையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. இங்கு நடைபெறும் தேர்தலுக்காக காங்கிரஸ், கம்யூனிஸ்டு மற்றும் பா.ஜ.க கட்சி வேட்பாளர்கள், வேட்புமனு தாக்கல் செய்தனர். அந்த வகையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரளா மாநிலம், வயநாடு தொகுதியில் போட்டியிடுவதற்காக நேற்று (03-04-24) வேட்புமனு தாக்கல் செய்தார்.

ராகுல் காந்தி கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி தொகுதியில் மீண்டும் போட்டியிடுவாரா? என்று கேள்வி் பலரிடம் இருந்தும் எழுந்து வருகின்றது. அதே நேரத்தில், அமேதி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பெயரை வெளியிடாமல் காங்கிரஸ் தொடர்ந்து மெளனம் காத்து வருகிறது. .

இதற்கிடையில், அமேதி தொகுதியில் போட்டியிட விரும்புவதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா விருப்பம் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், அமேதி தொகுதியில் மீண்டும் போட்டியிடுவது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி பதில் அளித்துள்ளார்.

உத்தரப் பிரதேசம் மாநிலம், காசியாபாத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மற்றும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூட்டாக சேர்ந்து நேற்று (17-04-24) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினர். அப்போது, ராகுல் காந்தியிடம், அமேதி தொகுதியில் போட்டியிடுவது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த ராகுல் காந்தி, “இது பாஜகவின் கேள்வி, மிகவும் நல்லது. கட்சித் தலைமையிடம் இருந்து எனக்கு எந்த உத்தரவு வந்தாலும் அதை நான் பின்பற்றுவேன். எங்கள் கட்சியில், இந்த வேட்பாளர்களின் தேர்வு முடிவுகள் அனைத்தும் காங்கிரஸ் தேர்தல் குழு கூட்டத்தில் எடுக்கப்படுகின்றன” என்று கூறினார்.

கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியிலும், கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் ராகுல் காந்தி போட்டியிட்டார். இதில், அமேதி தொகுதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணியிடம் தோல்வி அடைந்தார். அதே நேரம் வயநாடு தொகுதியில் அதிகபட்ச வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

“வாக்காளர்கள் கவனத்திற்கு...” - சத்யபிரதா சாகு முக்கிய தகவல்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
“Attention Voters...” - Satyapratha Sahu Important Information

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “தமிழ்நாட்டில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 6.32 கோடி ஆகும். இதில் முதல் தலைமுறை வாக்காளர்களின் எண்ணிக்கை 10.92 லட்சம் ஆகும். 80 வயதிற்கு மேல் உள்ள வாக்காளர்கள் 6 லட்சத்து 14 ஆயிரத்து 2 பேர் ஆவர். ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 3.06 கோடியும், பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 3.17 கோடியும், திருநர் வாக்காளர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 467 ஆகும்.

தமிழ்நாட்டில் மொத்தம் 68 ஆயிரத்து 321 வாக்கு சாவடி மையங்கள் உள்ளன. மொத்த வாக்குச்சாவடிகளில் 44 ஆயிரத்து 800 வாக்குச்சாவடிகள் (65 சதவிகிதம்) வெப் காஸ்டிங் முறையில் நேரடியாக தேர்தல் ஆணையத்தின் மூலம் கண்காணிக்கப்பட உள்ளன. 3.32 லட்சம் பணியாளர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ளனர். தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட காவலர்களும், கேரளா மற்றும் ஆந்திராவை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்களும் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 

“Attention Voters...” - Satyapratha Sahu Important Information

காலை 7 மணி முதல் மாலை 6 வரை வாக்குப்பதிவு நடைபெறும். மாலை 6 மணியிலிருந்து வரிசையில் நிற்பவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு அனைவரும் வாக்களிக்க ஏதுவாக நடவடிக்கை எடுக்கப்படும். அதாவது மாலை 6 மணிக்குள் வரிசையில் வந்து நிற்பவர்கள் வாக்களிக்கலாம். கடைசி வாக்காளர் வாக்களிக்கும் வரை முழுமையாக வாய்ப்பு வழங்கப்படும். தமிழகத்தின் 39 தொகுதிகளில் போட்டியிடும் மொத்த வேட்பாளர்கள் எண்ணிக்கை 950 ஆகும். இதில் ஆண் வேட்பாளர்கள் 874 பேரும், பெண் வேட்பாளர்கள் 76 பேரும் ஆவர்.

வாக்குச்சாவடி வளாகத்திற்குள் செல்போன் எடுத்துச் செல்லலாம். ஆனால் வாக்குச்சாவடிக்கு உள்ளே செல்போன் அனுமதிக்கப்படாது. வாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டாலும் ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், வங்கி கணக்கு புத்தகம், மருத்துவ காப்பீட்டு அட்டை, பான் கார்டு, பாஸ்போர்ட் உள்ளிட்ட 13 வகையான அரசு ஆவணங்களை பயன்படுத்தி வாக்களிக்கலாம். மாற்றுத்திறனாளிகள், முதியோர் மற்றும் கர்ப்பிணிகள் வாக்களிக்க ஏதுவாக வசதிகள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி மாற்றுத்திறனாளிகள், முதியோர், கர்ப்பிணிகள் உள்ளிட்டோர் 1950 என்ற எண்ணுக்கு அழைத்தால் வாக்களிக்க இலவசமாக வாகனம் அனுப்பி வைக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.