ADVERTISEMENT

அரசு விழாவில் பழங்குடியின மக்களை தரையில் அமர வைத்து அவமதிப்பு!

10:57 AM Nov 16, 2023 | mathi23

ADVERTISEMENT

ADVERTISEMENT

பழங்குடி சமுதாயத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் பிர்சா முண்டாவின் பிறந்தநாள் விழா நேற்று (15-11-23) கொண்டாடப்பட்டது. இந்த விழாவை முன்னிட்டு டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிர்சா முண்டாவின் உருவச் சிலைக்கு, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உள்பட மத்திய அமைச்சர்கள் பலரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதன்படி, பிர்சா முண்டாவின் பிறந்த இடமான ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பிரதமர் மோடி, பழங்குடியினர் பெருமை தின விழா கொண்டாட்டத்தை நேற்று தொடங்கி வைத்தார்.

அந்த வகையில், புதுச்சேரி மாநிலத்தில் ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாகப் பழங்குடியினர் பெருமை தின விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஜார்க்கண்ட் மாநிலத்தில் பிரதமர் மோடி பங்கேற்ற பழங்குடியினர் பெருமை தின விழா கொண்டாட்டத்தைக் காணொளி வாயிலாகப் புதுச்சேரியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

பழங்குடியினர் மக்களை கவுரவிக்கும் விழாவுக்கு புதுச்சேரியில் உள்ள பல்வேறு இடங்களில் இருந்து பழங்குடியின மக்கள் அழைத்து வரப்பட்டனர். ஆனால், அவர்கள் அமர்வதற்கு நாற்காலி இல்லை. மேலும், அவர்கள் ஆங்காங்கே நின்று கொண்டும், தரையில் அமர்ந்து கொண்டும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அப்போது அங்கு இருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பழங்குடியின விடுதலை இயக்க மாநிலச் செயலாளர் ஏகாம்பரம், “15 ஆண்டுகளாக எங்களது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த உதவிகளும் செய்யவில்லை. பழங்குடியின பெருமை தின விழா மேடையில், ஒரு பழங்குடியின மக்கள் அமர்வதற்கு இருக்கை வசதிகள் கூட ஏற்பாடு செய்யாதது ஏன்? என்று ஆளுநரிடமும், முதல்வரிடமும் கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது தமிழிசை செளந்தரராஜன், அதிகாரிகளை அழைத்து பழங்குடியின மக்கள் அமர்வதற்கு இருக்கை வசதிகள் மற்றும் மதிய உணவிற்கு ஏற்பாடு செய்யுமாறு உத்தரவிட்டார். அதன் பிறகு, அரங்கத்திற்குள் பிளாஸ்டிக் நாற்காலி கொண்டுவரப்பட்டு அவர்கள் அமர வைக்கப்பட்டனர். இதனால், இந்த நிகழ்ச்சியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. அரசு விழாவில் பழங்குடியின மக்கள் அமர்வதற்கு போதிய இருக்கை வசதி செய்து தரப்படவில்லை என்பதால் விழா ஏற்பாடுகளில் சம்பந்தப்பட்டுள்ள துறைத் தலைவர்களுக்கு விளக்கம் கேட்டு தமிழிசை செளந்தரராஜன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT