/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/jh-art.jpg)
ஜார்க்கண்ட் மாநிலம் ஜம்தாரா மாவட்டத்தில் அசன்சோல் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட கலிஜாரியா ஹால்ட் என்ற பகுதியில் எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று சென்றுள்ளது. அப்போது ரயில் பெட்டியில் திடீரென தீப்பிடித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அலறித்துடித்த பயணிகள் தீ விபத்தில் இருந்து தப்பிப்பதற்காக கீழே குதித்துள்ளனர். அப்போது எதிரே வந்த ரயில் மோதியுள்ளது. இந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்துகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை மற்றும் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த ரயில் விபத்து குறித்து ஜம்தாரா துணைஆட்சியர் ஆனந்த் குமார் கூறுகையில், “கலாஜாரியா ரயில்வே கிராசிங் அருகே ரயில் நின்று கொண்டிருந்தபோது சில பயணிகள் இறங்கி உள்ளனர். அப்போது எதிரே வந்த மற்றொரு உள்ளூர் ரயில் மோதி காயமடைந்து சிலர் இறந்ததாகத்தகவல் கிடைத்தது. இது குறித்து ரயில்வே மற்றும் மாவட்ட போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.இதுவரை இரண்டு உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. சம்பவத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் கிழக்கு ரயில்வேயின் முதன்மை மக்கள் தொடர்பு அலுவலர் கவுசிக் மித்ரா கூறுகையில், “ரயிலில் தீ விபத்து ஏதும் ஏற்படவில்லை. இதுவரை இருவர் உயிரிழந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளன. இறந்தவர்கள் பயணிகள் அல்ல. அவர்கள் பாதையில் நடந்து சென்றவர்கள் ஆவர். இந்த விபத்து குறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட நீதிபதி அட்வகேட் ஜெனரல் குழு (JAG) அமைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)