உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் பகுதியில் தலைமை மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில், 30 வயதான கரிஷ்மா என்ற கர்ப்பமான பெண் பிரசவித்திற்காக அனுமதிக்கப்பட்டார். அதன்படி, இன்று அவர்க்கு சிசேரியன் மூலம் அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
குழந்தை பிறந்த பிறகு, கரிஷ்மாவை பொது அறைக்கு மாற்றுவதற்காக அங்குள்ள ஊழியர்கள் லிப்டில் அழைத்துச் சென்றனர். அப்போது லிப்ட் பெல்ட் அறுந்தததால், ஸ்ட்ரெச்சரில் இருந்த கரிஷ்மா நிலைதடுமாறி கீழே விழுந்தார். லிப்டில் சிக்கியவர்கள் உதவி கோரி கூச்சலிட்டதை கேட்ட மருத்துவமனையில் உள்ளவர்கள் லிப்டை திறக்க முயன்றனர். ஆனால், அது தோல்வியில் முடிந்ததால் தொழில்நுட்ப வல்லுநர் குழுவுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அந்த தகவலின் பேரில், விரைந்து வந்த அவர்கள் லிப்டை திறந்து அங்கிருந்தவர்களை மீட்டனர். இதில், தலையில் பலத்த காயமடைந்த கரிஷ்மாவை உடனடியாக சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால், ஆத்திரமடைந்த கரிஷ்மாவின் உறவினர்கள், மருத்துவமனையை அடித்து தாக்குதல் நடத்தினர்.
இதனையடுத்து, தகவல் அறிந்த போலீசார், மருத்துவமனைக்கு வந்து அவர்களை சமாதானப்படுத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும், மருத்துவமனையில் மருத்துவர், மேலாளர் மற்றும் ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மீரட் தலைமை மருத்துவ அதிகாரி சம்பவ இடத்திற்கு வந்து 15 நோயாளிகளை மருத்துவமனையில் இருந்து அருகிலுள்ள மற்றொரு மருத்துவ மையத்திற்கு மாற்ற உத்தரவிட்டார். மேலும், மருத்துவமனைக்கு அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டது. குழந்தை பிறந்த சில மணி நேரத்திலேயே தாய் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.