
நண்பர்களிடையே ஏற்பட்ட மோதலில் 10ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம், கோழிக்கோடு மாவட்டம் தாமரச்சேரி பகுதியில் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில், படித்து வந்த மாணவர்களிடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் ஒருகட்டத்தில் வன்முறையாக மாறியது.
அதில், 10ஆம் வகுப்பு மாணவர் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் மீட்கப்பட்டு கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து பாதிக்கப்பட்டவரின் தந்தை இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், கேரள கல்வி அமைச்சர் வி. சிவன்குட்டி, இந்த விவகாரம் குறித்து துறை ரீதியான விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். பொதுக் கல்வி இயக்குநருக்கு முழுமையான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.