Totally wrong BJP ally opposition to central govt decision

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 10 இணைச் செயலாளர்கள் பணியிடம், 35 இயக்குநர்கள் மற்றும் துணைச் செயலாளர்கள் பணியிடம் என மொத்தம் 45 அதிகாரிகள் நேரடி நியமனம் (Lateral Entry) மூலம் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க மத்திய பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. இட ஒதுக்கீடு இல்லாமல் யுபிஎஸ்சி இந்த நியமனங்களை மேற்கொண்டிருப்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என திமுக காங்கிரஸ் எனப் பல்வேறு அரசியல் கட்சிகள் மத்திய அரசுக்கு தங்களது கடும் கண்டனத்தைத் தெரிவித்திருந்தன.

இந்நிலையில் மத்திய அரசின் இந்த நேரடி நியமனத்திற்கு பாஜகவின் கூட்டணிக் கட்சியான லோக் ஜனசக்தி கட்சியில் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சியைச் சேர்ந்தவருமான சிராக் பாஸ்வான் கூறுகையில், “இத்தகைய நியமனங்களில் எனது கட்சியின் நிலைப்பாடு முற்றிலும் தெளிவாக உள்ளது. அரசுப் பணி நியமனங்கள் எங்கிருந்தாலும் இட ஒதுக்கீடு விதிகளைப் பின்பற்ற வேண்டும். நான் இந்த அரசாங்கத்தில் அங்கம் வகிப்பவன் என்பதாலும், இந்தப் பிரச்சினைகளை எழுப்புவதற்கான வாய்ப்பை கொண்டிருப்பதாலும் இந்தத் தகவல் வெளிச்சத்துக்கு வந்த விதம் எனக்கும் கவலையளிக்கிறது.

எனது கட்சி சார்பில் பேசும்போது, ​​நாங்கள் இதற்கு முற்றிலும் ஆதரவாக இல்லை. இது முற்றிலும் தவறானது, இந்த விஷயத்தை நான் அரசாங்கத்தின் முன் எழுப்புவேன்,”என்று தெரிவித்தார். மத்திய அரசின் முடிவுக்கு பாஜக கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த தலைவரே எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.