
இந்திய உச்ச நீதிமன்றத்தின் 51வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 11ஆம் தேதி (11.11.2024) பதவியேற்றுக் கொண்டார். இவர், அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரம் மூலம் நிதி பெற்றது தொடர்பான வழக்கு; சட்டப்பிரிவு 370 உள்ளிட்ட முக்கிய வழக்குகளில் தீர்ப்பு வழங்கிய அமர்வில் இடம் பெற்றவர் ஆவார். இவரது பதவிக் காலம் நேற்றுடன் (13.05.2025) நிறைவடைந்தது. இதனையடுத்து அவர் ஒய்வு பெற்றார். இதற்கிடையே உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக, நீதிபதி பி.ஆர். கவாயை (பூஷன் ராமகிருஷ்ண கவாய்) தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சீவ் கன்னா முறைப்படி கடந்த மாதம் முன்மொழிந்தார்.
இந்த நியமன நடைமுறையின் ஒரு பகுதியாக இது தொடர்பான பரிந்துரை மத்திய சட்ட அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டது. அதன் தொடர்ச்சியாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாயை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு நியமித்து உத்தரவு பிறப்பித்திருந்தார். இதன் மூலம் உச்ச நீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் இன்று (14.05.2025) பதவியேற்க உள்ளார். இவருக்குக் குடியரசுத்தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார். மகாராஷ்டிரா அமராவதியில் கடந்த 1960ஆம் ஆண்டு நவம்பர் 24ஆம் தேதி காவாய் பிறந்தார். கடந்த 2000ஆம் ஆண்டு நாக்பூர் நீதிமன்ற அமர்வின் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார்.
அதன் பின்னர் 2003ஆம் ஆண்டு உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றார். அதனைத் தொடர்ந்து 2005ஆம் ஆண்டு பம்பாய் (மும்பை) உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியானார். மும்பையில் உள்ள முதன்மை இருக்கையிலும், நாக்பூர், அவுரங்காபாத் மற்றும் பனாஜியில் உள்ள அமர்வுகளிலும் நிதிபதியாக தலைமை தாங்கினார். அதனைத் தொடர்ந்து 2019ஆம் ஆண்டு மே மாதம் 24ஆம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றார். இவர் வரும் நவம்பர் 23ஆம் தேதி (23.11.2025) ஓய்வு பெற உள்ளார்.