தூத்துக்குடியில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கவே 13 பேரை காவல்துறையினர் சுட்டுக்கொன்றனர் என சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்தி வந்தனர். போராட்டத்தின் நூறாவது நாளான மே 22ஆம் தேதி, போராட்டக்காரர்களின் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதைத் தொடர்ந்து, அங்கு கலவரம் உருவானது. இந்தக் கலவரத்தின்போது 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர். நாட்டையே உலுக்கிய இந்தப் படுகொலையை பலரும் கண்டித்து வந்தனர். ஆளும் தமிழக அரசு, நடிகர் ரஜினிகாந்த் மற்றும் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்கள் சமூக விரோதிகளால் போராட்டம் தூண்டப்பட்டதாக குற்றம்சாட்டி வருகின்றனர்.
இதுகுறித்து பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தூத்துக்குடியில் நடந்த போராட்டத்தை விட நூறு மடங்கு அதிகமான போராட்டங்கள் காஷ்மீரில் நடந்து கொண்டிருக்கின்றன. தூத்துக்குடியில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கவே காவல்துறையினர் 13 பேர் சுட்டுக் கொன்றுள்ளனர். ஆனால், காஷ்மீரில் அப்பாவில் சி.ஆர்.பி.எஃப். வீரரின் மீது வழக்கு பதியப்படுகிறது. இது ஏற்றுக்கொள்ள முடியாதது’ என பதிவிட்டுள்ளார்.