Skip to main content

அமித்ஷா அமைச்சகத்தின் முன்பு 15க்கும் மேற்பட்ட திரிணாமூல் எம்.பிக்கள் தர்ணா!

Published on 22/11/2021 | Edited on 22/11/2021

 

tmc mp

 

மேற்கு வங்கத்தில் ஆட்சியைப் பிடித்துள்ள மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ், திரிபுரா மாநிலத்திலும் கட்சியை வளர்க்க கடும் முயற்சிகளில் இறங்கியுள்ளது. இந்தச் சூழலில், அம்மாநிலத்தில் ஆளும் பாஜகவிற்கும், திரிணாமூல் காங்கிரஸுக்கும் தொடர்ந்து மோதல் நடந்துவருகிறது.

 

இந்தநிலையில் நேற்று (21.11.2021), திரிபுரா முதல்வர் பேசிய பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றபோது, அந்தக் கூட்டத்தை திரிணாமூல் காங்கிரஸ் இளைஞரணி தலைவர் சயோனி கோஷ் இடையூறு செய்ததாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து கூட்டத்தில் பாஜக தொண்டர்கள் மீது காரை ஏற்றி கொல்ல முயன்றதாக கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது கொலை முயற்சி, இருவேறு குழுக்களிடையே பகைமையை உருவாக்குதல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

முன்னதாக பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தைத் தாண்டி செல்லும்போது ‘கேலா ஹோப்’ என தான் கத்தும் வீடீயோவை சயோனி கோஷ் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, திரிபுராவின் அகர்தலாவில் உள்ள காவல் நிலையத்தில், பாஜக உறுப்பினர்கள் தங்களது உறுப்பினர்களைத் தாக்கியதாக திரிணாமூல் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. காவல் நிலையத்தின் முன்னரே காவல்துறையின் முன்பாகவே தங்களது தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் திரிணாமூல் காங்கிரஸ் கூறியுள்ளது.

 

இதற்கிடையே, அகர்தலாவின் பகாபன் தாக்கூர் சௌமுனி பகுதியில் உள்ள திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் வழிகாட்டுதல் குழு தலைவர் சுபால் பௌமிக் இல்லத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பாஜக குண்டர்கள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக திரிணாமூல் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது.

 

இந்தச் சூழலில், திரிபுராவில் தங்களது தொண்டர்களைக் காவல்துறையினர் கொடுமை செய்வதாகக் கூறி, இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் புகாரளிக்க 15க்கும் மேற்பட்ட திரிணாமூல் எம்.பி.க்கள் டெல்லி விரைந்தனர். அவர்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க நேரம் கேட்டிருந்தனர். இந்தநிலையில், தற்போதுவரை நேரம் கிடைக்காததையடுத்து அவர்கள் மத்திய உள்துறை அமைச்சகத்தின் வாசலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

அதே சைக்கிள், அதே வாடகை - மத்திய அமைச்சர்களைக் கிண்டல் செய்யும் இணையவாசிகள்!

Published on 12/06/2024 | Edited on 12/06/2024
BJP Union Ministers who did not bring bouquet during Chandrababu Naidu meeting

நாடாளுமன்ற தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட 4 மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தலும் நடைபெற்றது. இதில் 175 தொகுதிகளை கொண்ட ஆந்திரமாநில சட்டமன்ற தேர்தலில் 164 தொகுதிகளில் வெற்றிபெற்று ஜெகன்மோகன் தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியை சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கூட்டணி வீழ்த்தி அமோக வெற்றி பெற்றது. தெலுங்கு தேசம் கூட்டணியில் பாஜகவும், பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியும் இடம்பெற்றிருந்தது. 

இந்த நிலையில் ஆந்திர மாநிலத்தில் சந்திரபாபு நாயுடு நான்காவது முறையாக முதல்வராக பதவியேற்றுள்ளார். இன்று நடைபெற்று வரும் பதவியேற்பு விழாவில் ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண், சந்திரபாபு நாயுடுவின் மகன் நர லோகேஷ் உள்ளிட்ட 24 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றுள்ளனர். இவ்விழாவில் பிரதமர் மோடி, பாஜக மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ஜே.பி.நட்டா, நடிகர்கள் ரஜினிகாந்த், சீரஞ்சிவி, தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

பதவி ஏற்பு விழாவிற்கு வருகை தந்த மத்திய அமைச்சர்கள் அமித்ஷா மற்றும் ஜே.பி.நட்டா இருவரையும் சந்திரபாபு நாயுடு வரவேற்றார். அப்போது சந்திரபாபு நாயுடுவிடம் கைகுலுக்கி விட்டு திரும்பிப் பார்த்த அமித்ஷா, உதவியாளர் வைத்திருந்த பூங்கொத்தை வாங்கி சந்திரபாபு நாயுடுவிடம் கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர் பூங்கொத்தை மீண்டும் உதவியாளரிடமே அமித்ஷா கொடுக்க அதேசமயம் வெறும் கையோடு வாழ்த்து தெரிவிக்க காரில் வந்து இறங்கிய ஜே.பி.நட்டா சந்திரபாபு நாயுடுவுக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார். 

ஜே.பி.நட்டா பூங்கொத்து கொண்டுவராததை கவனித்த அமித்ஷா, உதவியாளரிடம் தான் கொடுத்த பூங்கொத்தை வாங்கி, அதே பூங்கொத்தை மீண்டும் சந்திரபாபு நாயடுவுக்கும் கொடுக்கவும் செய்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், கூட்டணி கட்சி தலைவரை சந்திக்க வரும் போது, பூங்கொத்து கூட வாங்கி வராமல் ஒரே பூங்கொத்தை கொடுப்பதா என இணையவாசிகள் கிண்டல் செய்து வருகின்றனர்.

Next Story

அமித்ஷா மீது குற்றச்சாட்டு; காங்கிரஸ் தலைவருக்கு 7 மணி வரை கெடு!

Published on 03/06/2024 | Edited on 03/06/2024
election commission Up to 7 o'clock for the Congress leader on Allegation against Amit Shah

18வது மக்களவைத் தேர்தல் இந்தியா முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளது. தேர்தலின் பதிவான வாக்குகள் நாளை (04-06-24) எண்ணப்பட்ட முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. நாளை வெளிவர இருக்கும் தேர்வு முடிவுக்காகப் பொதுமக்கள் ஆரவமுடன் நாளை விடியலுக்காக எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றனர். 

இதற்கிடையே, காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராகப் பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை வைத்திருந்தார். இது குறித்து அவர் கூறியதாவது, “மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்ததும் நாடு முழுவதும் உள்ள 150 மாவட்ட ஆட்சியர்களை அமித் ஷா அழைத்து பேசியுள்ளார். தேர்தல் நடத்தும் அதிகாரிகளாக இருக்கும் ஆட்சியர்களை அழைத்து பேசியிருப்பது அப்பட்டமான மற்றும் வெட்கக்கேடான மிரட்டல். பா.ஜ.க எவ்வளவு அவநம்பிக்கையில் உள்ளது என்பதைக் காட்டுகிறது. மக்களின் விருப்பம் வெல்லும், ஜூன் 4 ஆம் தேதி, மோடி, அமித் ஷா மற்றும் பா.ஜ.க வெளியேறுவார்கள். அதிகாரிகள் எந்த அழுத்தத்திற்கும் ஆளாகாமல் அரசியல் சாசனத்தை நிலைநாட்ட வேண்டும். அவர்கள் கண்காணிப்பில் உள்ளனர்” என்று கூறினார்.

ஜெய்ராம் ரமேஷின் இந்தக் கருத்துக்குத் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது. இது தொடர்பாக அவருக்குத் தேர்தல் ஆணையம் எழுதியுள்ள கடிதத்தில், ‘வதந்திகளைப் பரப்புவதும், அனைவரையும் சந்தேகிப்பதும் சரியல்ல. மாவட்ட ஆட்சியர்களோ, தேர்தல் அதிகாரிகளோ என அனைவரிடம் பாதிப்பை ஏற்படுத்த முடியுமா?. இதைச் செய்தது யார் என்று சொல்லுங்கள். அப்படிச் செய்தவர்களைத் தண்டிப்போம். வாக்குகளை எண்ணும் முன் விவரங்களைச் சொல்ல வேண்டும்.

வாக்கு எண்ணும் செயல்முறை ஒவ்வொரு தேர்தல் அதிகாரி மீது செலுத்தப்படும் ஒரு புனிதமான கடமையாகும். மேலும் ஒரு மூத்த, பொறுப்பான மற்றும் அனுபவம் வாய்ந்த தலைவரின் இத்தகைய பகிரங்க அறிக்கைகள் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன, எனவே, பெரிய பொது நலனுக்காக உரையாற்றப்பட வேண்டும்’ என்று கூறியது. மேலும், அந்த 150 ஆட்சியர்களின் விவரத்தை இன்று 7 மணிக்குள் வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.