Tirupati Devasthanam decision Non-Hindus employees should not be appointed

ஆந்திராவில் கடந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைமையிலான ஜெகன்மோகன் ரெட்டியின் ஆட்சியின் போது, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தயாரிக்கப்படும் லட்டுவில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். இந்த குற்றச்சாட்டு நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு விசாரணை நடத்தி வருகிறது.

Advertisment

இந்த நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்துக்கள் அல்லாத ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திருப்பதி தேவஸ்தான் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திரப் பிரதேசத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து, புதிதாக நியமிக்கப்பட்ட திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர்களின் முதல் கூட்டம் நேற்று நடைபெற்றது. திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், திருப்பதி கோவிலில் பணிபுரியும் இந்து அல்லாத பிற மதத்தவர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

இது குறித்து பி.ஆர்.நாயுடு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “திருப்பதி கோவில் நிர்வாகத்தில் எத்தனை இந்துக்கள் அல்லாதவர்கள் உள்ளனர் என்பதை மதிப்பீடு செய்து அவர்கள் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படுவார்கள். திருமலையில் பணிபுரியும் இந்துக்கள் அல்லாதவர்கள் குறித்து உரிய முடிவு எடுக்குமாறு மாநில அரசுக்கு கடிதம் எழுதுவோம். திருப்பதி தேவஸ்தானம் ஒரு இந்து மத நிறுவனம். கோவிலில் பணிபுரிய இந்துக்கள் அல்லாதவர்களை பணியமர்த்தக்கூடாது என்று வாரியம் கருதுகிறது. கோவிலில் பல்வேறு துறைகளில் பணியாற்றும் அவர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டத்தை (விஆர்எஸ்) வழங்குமாறு நாங்கள் அரசாங்கத்திற்குப் பரிந்துரை செய்வோம்” என்று கூறினார்.