Skip to main content

ஐந்து மாநில தேர்தல்; அரியணையில் அமரப்போவது யார்? - வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகள்!

Published on 09/03/2021 | Edited on 09/03/2021

 

cm candidates

 

தமிழ்நாடு, கேரளா, அஸ்ஸாம், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கும் வரும் மார்ச் - ஏப்ரல் மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தல் முடிவுகள் வரும் மே 2 ஆம் தேதி வெளியாக இருக்கின்றன. இந்தநிலையில் டைம்ஸ் நவ் ஊடகமும், சி-வோட்டர்ஸும் இணைந்து இம்மாநிலங்களுக்கான தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது. 

 

புதுச்சேரியில் பாஜக - என்.ஆர் காங்கிரஸ் - அதிமுக இணைந்து 18 இடங்களைக் கைப்பற்றும் எனவும், காங்கிரஸ் - திமுக கூட்டணி 12 இடங்களைப் பெற்று தோல்வியடையும் என இந்தக் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

 

அஸ்ஸாம் மாநிலத்தைப் பொறுத்தவரை பாஜக கூட்டணி, அதிக இடங்களை வெல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இது பெரிய வெற்றியாக அமையாது எனவும் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. பாஜக கூட்டணி 67 இடங்களையும், காங்கிரஸ் கூட்டணி 57 இடங்களையும் வெல்லும் என கருத்துக்கணிப்பு கூறுகிறது. கடந்த முறையி 26 இடங்களை மட்டுமே காங்கிரஸ் கூட்டணி வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

கேரளாவைப் பொறுத்தவரை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான ஆளும் இடது ஜனநாயக முன்னணி வெற்றியை ஈட்டும் என்றும், அது 82 இடங்களில் வெல்லும் என்றும் கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறுகின்றன. காங்கிரஸ் கூட்டணி 56 இடங்களை வெல்லும் எனவும், பாஜக ஒரே ஒரு இடத்தில்தான் வெல்லும் எனவும் டைம்ஸ் நவ் - சி வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பு கூறியுள்ளது.

 

மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி, தொடர்ந்து மூன்றாவது முறையாக அரியணை ஏறவுள்ளார். கருத்துக்கணிப்பின்படி 294 சட்டப்பேரவை தொகுதிகளில் மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் 154 இடங்களை வென்று ஆட்சியமைக்கும். பாஜக 107 இடங்களைப் பிடிக்கும். காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கூட்டணி வெறும் 33 இடங்களில் மட்டுமே வெற்றியடையும்.

 

கருத்துக்கணிப்பின்படி தமிழக்தில் திமுக கூட்டணி ஆட்சியமைக்கவுள்ளது. அதிமுக - பாஜக கூட்டணி 65 இடங்களைக் கைப்பற்றும் என்றும், திமுக கூட்டணி 158 இடங்களை வெல்லும் என கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கிறது. முதலமைச்சர் வேட்பாளர் குறித்து கருத்துக்கணிப்பில் 38 சதவீதம் பேர் திமுக தலைவர் ஸ்டாலினை முதல்வராக தேர்ந்தெடுத்துள்ளனர். தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியை 31 சதவீதம் பேரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனை 7.4  சதவீதம் பேரும் தேர்ந்தெடுத்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்