/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/sonali-bogath.jpg)
டிக் டாக் பிரபலமும் ஹரியானா மாநில ஆடம்பூர் பகுதியின் பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற தொகுதி வேட்பாளருமான சோனாலி போகத் மாரடைப்பால் காலமானார்.
41 வயதான சோனாலி போகத் 2006ல் ஒரு தனியார் தொலைக்காட்சியின் தொகுப்பாளராக தன் வாழ்க்கையைத்தொடங்கியவர். டிக் டாக் செயலி வந்தபிறகு அதில் தான் நடித்த பதிவுகளை பதிவிட்டதன் மூலம் தேசிய அளவில் புகழ் பெற்றார். அதன் பின் 2019ல் ஒரு வெப் சீரிஸிலும் நடித்தார். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராகபங்கேற்றுள்ளார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டவர். 2019ல் ஹரியானா மாநில ஹிசார் மாவட்டத்தில் ஆடம்பூர் தொகுதியின் சட்டமன்ற வேட்பாளராக பாஜக சார்பில் போட்டியிட்டு தோற்றார். இந்நிலையில், சில தினங்கள் முன்பு ஒரு தனியார் நிகழ்ச்சிக்காக தனது குழுவினருடன் கோவா சென்றவர், திங்கள் அன்று இரவு தனக்கு அசௌகரிய நிலை ஏற்படவே தனது பணியாளர்களிடம் தெரிவித்தார். அவர்கள் சோனாலி போகத்தை அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மருத்துவ மனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சோனாலி போகத் இறப்பிற்கு இரண்டு மணிநேரம் முன்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்ஸ்டா ரீல் ஒன்றை பதிவிட்டிருந்தார். தற்போது அவர் கடைசியாக பதிவிட்ட ரீல் வைரல் ஆகி வருகிறது.
இவரது கணவர் சஞ்சய் போகத் சில ஆண்டுகளுக்கு முன்பே இறந்த நிலையில், கணவர் இறந்ததால் தான் அதிக மன உளைச்சலில் இருப்பதாக நாளிதழ் ஒன்றுக்கு அவர் அப்போது பேட்டி அளித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. மகள் யசோதரா போகத் உடன் தனியே வசித்து வந்த போகத்தின் இறப்பு செய்தி ஹரியானா மாநில மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)