Skip to main content

பஞ்சாப்பில் பலத்த பாதுகாப்பு; பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

Published on 09/05/2025 | Edited on 09/05/2025

 

Tight security in Punjab Warning to the public

பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று முன்தினம் (07.05.2025) நள்ளிரவு 01.44 மணி அளவில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் முப்படைகள் கூட்டாக இணைந்து அதிரடி தாக்குதல் நடத்தினர். 9 இடங்களில் இலக்குகளை குறிவைத்து தீவிரவாத அமைப்புகளைத் துல்லியமாகத் தாக்கி அழிக்கப்பட்டதாக ராணுவ அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். இந்த தாக்குதலில் 26 தீவிரவாதிகள் உயிரிழந்ததாகவும், 60க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகியிருந்தது.

இத்தகைய சூழலில் தான் நேற்று (08.05.2025) இரவு பாகிஸ்தான் எல்லைக்  கட்டுப்பாட்டுக் கோடு மற்றும் சர்வதேச எல்லைகள் வழியாக பல்வேறு இடங்களுக்கு ஆளில்லா விமானங்களை அனுப்ப முயற்சிகள் தோல்வியடைந்தபோது, ​​உதம்பூர், சம்பா, ஜம்மு, அக்னூர், நக்ரோட்டா மற்றும் பதான்கோட் பகுதிகளில் இந்திய ராணுவ வான் பாதுகாப்பு பிரிவுகளால் நடத்தப்பட்ட பெரிய அளவிலான எதிர் ஆயுத நடவடிக்கையின் போது 50க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்கள் வெற்றிகரமாக செயலிழக்கச் செய்யப்பட்டன. இதில் அதிநவீன உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டன. இது வான்வழி அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள இந்திய ராணுவத்தின் வலுவான திறனை நிரூபிக்கிறது என ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மற்றொருபுறம் ஜம்மு காஷ்மீரில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக, உதம்பூரில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு இன்று (09.05.2025) விடுமுறை விடப்பட்டுள்ளன. அதே சமயம் ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா தலைமையில் அவரது இல்லத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான உயர்மட்டக் கூட்டம் நடைபெற்றது. அப்போது எல்லையில் நிலவும் பதற்றமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, மாநிலம் முழுவதும், குறிப்பாக எல்லை மாவட்டங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தல்களை வழங்கினார். அதோடு அனைத்து அரசு ஊழியர்களின் விடுமுறையையும் ரத்து செய்து, தலைமைச் செயலகத்தில் ஆஜராகுமாறு முதலமைச்சர் பஜன்லால் சர்மா அறிவுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் பஞ்சாப் மாநிலம் அமிர்தரஸ் பகுதியில் மீண்டும் அசாதாரண சூழ்நிலை  நிலவுகிறது. அதாவது இந்திய ராணுவத்தினர் தரப்பில் இருந்து பொதுமக்களுக்கு எச்சரிக்கையானது விடுக்கப்பட்டிருக்கிறது. அதில், “பொதுமக்கள் யாரும் தங்கள் வீட்டிலிருந்து வெளியேற வேண்டாம். வீட்டிற்குள் இருக்கும் போது ஜன்னல்கள் அருகில் இருக்க வேண்டாம். வீட்டில்  இருக்கக்கூடிய மின்விளக்குகள் அனைத்தையும் அணைத்து விட்டு வீட்டுக்குள் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனப் பொதுமக்களுக்கு ராணுவத்தினர் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர். மேலும் அமிர்தசரஸ் ஸ்ரீ குரு ராம் தாஸ் ஜி சர்வதேச விமான நிலையத்திற்கு வெளியே பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை விமான நிலையத்தின் முழு செயல்பாடுகளும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. 

சார்ந்த செய்திகள்