Three people passed away in Manipur crises

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் பைரன் சிங் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் பெரும்பான்மை சமூகமாக உள்ள மைத்தேயி சமூகத்தினர் தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்துச் சலுகைகள் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு அந்த மாநிலத்தின் பழங்குடி சமூகத்தினரான குக்கி மற்றும் நாகா இன மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால், கடந்த மே மாதம் 3 ஆம் தேதி முதல் மணிப்பூர் மாநிலத்தில் தொடர்ந்து வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இந்த வன்முறைச் சம்பவங்களால் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Advertisment

இதற்கிடையில் கடந்த மே மாதம் 4 ஆம் தேதி குக்கி பழங்குடியினப் பெண்கள் இருவரை மைத்தேயி இன இளைஞர் கும்பல் ஒன்று ஆடைகளைக் களைந்து இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதனையடுத்து மணிப்பூர் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழு ஒன்று அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் மணிப்பூரில் கலவரங்கள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.

Advertisment

இந்த நிலையில் மணிப்பூரில் மீண்டும் நிகழ்ந்த வன்முறையில் கிராம தன்னார்வலர்கள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். மணிப்பூரில் மாநிலத்தில் பாதுகாப்பிலிருந்து அசாம் ரைபிள் பிரிவு படையினர் விலக்கிக் கொள்ளப்பட்டத்தைத் தொடர்ந்து, கிராம மக்கள் தங்களைப் பாதுகாப்பு அரண் அமைத்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்த பணியில் கிராம தன்னார்வலர்கள் பலரும் ஈட்டுப்பட்டுள்ளனர். அப்படிப் பாதுகாப்புப் பணியில் ஈட்டுப்பட்டிருந்த 3 தன்னார்வலர்கள் சுட்டுகொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாக மக்கள் அதிகம் வசிக்கும் உக்ருல் மாவட்டத்தில் உள்ள தவாய்குக்கி என்ற கிராமத்தில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. கொல்லப்பட்ட மூன்று பேரில் உடல்களும் சிதைக்கப்பட்டுச் சுடப்பட்டிருந்ததாகக் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். மைத்தேயி சமுகத்தைச் சேர்ந்த பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று மாவட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Advertisment