Skip to main content

''பாஜகவில் சேர்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்'' - புதுவை முதல்வர் நாராயணசாமி காட்டம்!!

Published on 25/01/2021 | Edited on 25/01/2021

 

narayasamy

 

புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், அம்மாநில அமைச்சருமான நமச்சிவாயம் காங்கிரஸ் தலைமை மீதான அதிருப்தி காரணமாக, கடந்த இரண்டு நாட்களாக தனது ஆதரவாளர்களுடன் தனியாக ஆலோசனை நடத்திவந்தார். இந்த நிலையில், நமச்சிவாயம் (வில்லியனூர் தொகுதி), தீப்பாய்ந்தான் (ஊசுடு தொகுதி) ஆகிய இருவரும் தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தனர். இதற்கான கடிதத்தை அம்மாநில சட்டப்பேரவை சபாநாயகர் சிவக்கொழுந்துவிடம் வழங்கினர்.

 

புதுச்சேரியில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆளும் கட்சியைச் சேர்ந்த இரு எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தது, அம்மாநில காங்கிரஸ் கட்சியினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் புதுச்சேரி மாநில அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

இந்நிலையில், பாஜகவில் சேர்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். ''புதுச்சேரியிலும், தமிழகத்திலும் பாஜகவில் சேர்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள். அனைவரையும் அரவணைத்துச் செல்ல வேண்டும் என்ற நிலையில்தான் நான் செயல்பட்டேன். ராஜினாமா செய்தவர்களின் சரித்திரம் பற்றி புதுச்சேரி மக்களுக்கு நன்றாகத் தெரியும். தேர்தல் நெருங்கும் போது இதுபோன்று நடக்கும் அதையும் சமாளித்து தேர்தலை காங்கிரஸ் சந்திக்கும்''. என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திடீரென மயங்கி விழுந்த நிதின் கட்கரி; பிரச்சாரத்தில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Nitin Gadkari suddenly fainted on the campaign platform

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே நேரத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தைப் பொருத்தவரை ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், வரும் 26 ஆம் தேதி  இரண்டாம் கட்டமாக 8 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. யவத்மால் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சியின் வேட்பாளர் ராஜஸ்ரீ பாட்டில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் புசாத் நகரில் ராஜஸ்ரீ பாட்டிலை ஆதரித்து பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டார். அப்போது பிரச்சார மேடையில் திடிரென நிதின் கட்கரி மயங்கி விழுந்தார். உடனடியாக அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு சிறிது நேரம் இடைவெளிக்கு பிறகு மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பினார். பின்பு பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய நிதின் கட்கரி ராஜஸ்ரீ பாட்டிலுக்கு வாக்கு சேகரித்தார்.

இந்தநிலையில், வெப்பம் காரணமாக உடல்நிலை பாதிப்பு எற்பட்டது என்றும், தற்போது நலமாக இருப்பதாகவும் கூறியுள்ள நிதின் கட்கரி உங்கள் அன்பிற்கு நன்றி என்று என்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Next Story

 உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை; இளைஞருக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
happened to the young man on Treatment to reduce obesity in puducherry

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். 

இந்த நிலையில், உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் நேற்று முன் தினம் (22-04-24) அந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அவர்கள் அளித்த அந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.