Skip to main content

குஜராத்தில் திருவள்ளுவர் சிலை திறப்பு; தமிழக அமைச்சர் பங்கேற்பு 

Published on 13/02/2023 | Edited on 13/02/2023

 

thiruvalluvar statue opening ceremony in gujarat tamil nadu minister participated 

 

குஜராத் மாநிலம் அகமதாபாத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் 12 ஆம் தேதி மணிநகர் ஸ்ரீ கிருஷ்ணா தமிழ்ப் பள்ளி வளாகத்தில் உலகப் பொதுமறையாம் திருக்குறளைத் தந்த அய்யன் திருவள்ளுவரின் சிலை திறப்பு விழா, புதிய தமிழ்ப் பள்ளிக்கூடத்தின் அடிக்கல் நாட்டு விழா மற்றும் பொங்கல் விழா நடைபெற்றது.

 

இந்த விழாவில் தமிழ்நாடு அரசின் சார்பாகத் தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்துகொண்டார். அமைச்சர் தலைமையில் தமிழ்ச் சங்கத் தலைவர் கவிதாசன் நிர்வாகிகள் பிரபாகரன், திருநாவுக்கரசு, ராஜா நரேஷ்  ஆகியோர் முன்னிலையில் விழா நடைபெற்றது.

 

திருவள்ளுவர் சிலையை விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் வி.ஜி. சந்தோஷம் வழங்கினார். இது 147வது சிலையாகும். இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக குஜராத் அரசின் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஜெகதீஷ் ஈஸ்வர் விஸ்வகர்மா, புதுவை யூனியன் பிரதேசத்தின் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், கூட்டுறவுத் துறை அமைச்சர் சாய் சரவணன், முன்னாள் அமைச்சர் கல்யாணசுந்தரம், மதிமுக துணைப் பொதுச் செயலாளரும் மல்லைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவருமான மல்லை சத்யா, அகமதாபாத் மாநகராட்சி மேயர் கீர்த்தி குமார் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த குஜராத்தில் பணியாற்றும் இந்திய ஆட்சிப் பணியாளர்களான தென்னரசன், ரஞ்சித் குமார், நாகராஜன் மற்றும் ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணியாளர் ஜெகதீசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். உலகளாவிய அளவில் தமிழர்களின் பெருமை, தமிழ் பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றின் சிறப்புகள் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு இந்த நிகழ்வில் பேசினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழக அரசு சார்பில் தொல்காப்பியர் உருவச் சிலைக்கு மலர் வணக்கம் நிகழ்ச்சி!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Flower salutation program for Tolkappiyar statue

தொல்காப்பியம் காலப்பழைமையும் கருத்துச் செழுமையும் கொண்ட ஒரு கருவூலமாகும். பழைமையான நூல் இலக்கணப் பனுவலாக தமிழ்மொழிக்கு வாய்த்திருப்பது பெரும் பேறாகும். தொல்காப்பியத்துக்கு முன்னரே இலக்கிய இலக்கண நூல்கள் பலவாக இருந்தன. முன்பு நூல் கண்டு உரைப்பட எண்ணி புலன் தொகுத்தார் என்றே பாயிரம் சொல்கிறது. எழுத்து, சொல், பொருள் என அமைத்துக்கொண்டு ஒன்பது இயல்கள் என்ற ஒழுங்கினதாய் இருபத்தேழு இயல்களாக, 1610 நூற்பாக்கள் கொண்டு தொல்காப்பியத்தைத் தொல்காப்பியர் படைத்தார். தொல்காப்பியம் முழுமையும் முதற்கண் 1891- இல் பதிப்பித்த பெருமை யாழ்ப்பாணம் சி.வை. தாமோதரம் பிள்ளையைச் சாரும்.

தொல்காப்பியத்துக்குப் பின்னர் இருபதுக்கு மேற்பட்ட இலக்கண நூல்கள் பிறந்தன. தொல்காப்பியம் வழங்கிய தொல்காப்பியரே தமிழுக்கு ஆதி பகவன் என்று சொல்வது மிகையாகாது. ஒப்பில்லாத முயற்சியாலும், தமிழ் வளர்ச்சித் துறையின் பெருந்துணையாலும் 7 அடி உயர பீடத்தில் அமைக்கப்பட்டுள்ள வெண்கலச்சிலையால் தொல்காப்பியரின் பெருமை ஒல்காப் புகழ் பெறுகிறது.

இந்நிகழ்ச்சி சித்திரை முழுமதி நாளான இன்று (23.04.2024) காலை 10.00 மணிக்கு சென்னை மெரினா எதிர்புறம் சென்னைப் பல்கலைக்கழக இணைப்பு கட்டட வளாகத்தில் (திருவள்ளுவர் சிலை எதிர்புறம்) அமைந்துள்ள தொல்காப்பியரின் திருவுருவச் சிலைக்கு அரசு செயலாளர், தமிழறிஞர்கள். பொதுமக்கள், எழுத்தாளர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டுச் சிறப்பிக்க உள்ளனர் என அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்ட்டுள்ளது. 

Next Story

பா.ஜ.க வேட்பாளர் வெற்றி; “சர்வாதிகாரியின் உண்மை முகம் மீண்டும் வந்துவிட்டது” - ராகுல் காந்தி

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Rahul Gandhi says The true face of a dictator has come back on BJP candidate wins

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதற்கிடையே,மொத்தம் 26 மக்களவைத் தொகுதிகள் கொண்ட குஜராத் மாநிலத்தில் மே 7ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நடைபெறவிருக்கிறது. இந்த மாநிலத்தில் நடைபெறும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஏப்ரல் 19ஆம் தேதி எனத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அந்த வகையில், காங்கிரஸ், பா.ஜ.க, மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் பலர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.  அதன்படி, குஜ்ராத் மாநிலத்துக்கு உட்பட்ட சூரத் மக்களவைத் தொகுதிக்கான தேர்தலில் போட்டியிட பா.ஜ.க, காங்கிரஸ் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் பலர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

இதில், பா.ஜ.க சார்பில் முகேஷ் தலால் வேட்புமனு தாக்கல் செய்தார். அதே போல், காங்கிரஸ் கட்சி சார்பாக நிலேஷ் கும்பானி, பகுஜன் சமாஜ் கட்சி பியோரேலால் பாரதி உள்பட 8 பேர் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில்,காங்கிரஸ் கட்சி வேட்பாளர் நிலேஷ் கும்பானியின் வேட்பு மனுவில் போலியான சாட்சி கையெழுத்திட்டதாகக் கூறி அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து, அவருக்கு பதிலாக காங்கிரஸ் சார்பில் மாற்று வேட்பாளராக சுரேஷ் பத்ஷாலா அறிவிக்கப்பட்டார். ஆனால், அவரது வேட்புமனுவும் தகுதியற்றது எனக் கூறி, அவருடைய வேட்புமனுவிலும் போலியான சாட்சி கையெழுத்திட்டதாகக் கூறி நிராகரிக்கப்பட்டது.

இதன் காரணமாக, சூரத் மக்களவைத் தொகுதிக்கான போட்டியில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியேறியது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களுடைய வேட்பு மனுவை வாபஸ் பெற கடைசி நாள் இன்று (22-04-24) என ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில், அந்தத் தொகுதியில் போட்டியிடும் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் உட்பட அனைத்து சுயேட்சை வேட்பாளர்கள் தங்களுடைய வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றுவிட்டனர்.

இதனால், சூரத் தொகுதியின் பா.ஜ.க வேட்பாளர் முகேஷ் தலால், வாக்குப்பதிவுக்கு முன்னரே போட்டியின்றி வெற்றி பெற்றுவிட்டதாக அறிவிக்கப்பட்டார்.  இது காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சிகளையும் கடும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மேலும், இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Rahul Gandhi says The true face of a dictator has come back on BJP candidate wins

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “சர்வாதிகாரியின் உண்மை முகம் மீண்டும் நாட்டின் முன் வந்துவிட்டது. பாபா சாகேப் அம்பேத்கரின் அரசமைப்புச் சட்டத்தை அழிப்பதற்காக, மக்கள் தங்கள் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் உரிமையைப் பறிப்பது மற்றொரு படியாகும். மீண்டும் சொல்கிறேன், இது வெறும் ஆட்சி அமைப்பதற்கான தேர்தல் அல்ல, நாட்டைக் காப்பாற்றும் தேர்தல், அரசியல் சாசனத்தைப் பாதுகாக்கும் தேர்தல்” என்று பதிவிட்டுள்ளார்.