Advertisment

“சிறுபான்மையினரின் கல்வியை அழித்து இருட்டிலே தள்ளக்கூடிய ஒரு சதி முயற்சி” - திருமாவளவன்

Thirumavalavan said conspiracy to destroy education of minorities

Advertisment

இந்தாண்டின் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த ஜனவரி மாதம் 31ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளான குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நேற்று உரையாற்றினார். பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது நாளின் போது மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து உரையாற்றினார்.

இதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நேற்று (03-02-25) நாடாளுமன்ற மக்களவையில் நடைபெற்றது. அப்போது உரையாற்றிய விசிக தலைவரும், எம்.பியுமான திருமாவளவன், “குடியரசுத் தலைவரின் உரை பட்ஜெட்டுக்கான ஒரு முன்னோட்ட அறிக்கை என நாம் கூறலாம். நிதிநிலை அறிக்கையில் இந்த அரசு என்ன அறிவிக்கப்போவது என்பதை முன்கூட்டியே அறிவிக்கக்கூடிய ஒரு உரையாக குடியரசுத் தலைவரின் உரை அமைவது இயல்பானது. அந்த வகையிலே பார்க்கிறபோது நிதிநிலை அறிக்கையும் சரி குடியரசுத் தலைவரின் உரையும் சரி நம்பிக்கை ஊட்டுவதாக இல்லை.

பட்டியல் சமூகத்தினர், பழங்குடியினர், சிறுபான்மையினர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் உள்ளிட்ட விளிம்பு நிலை மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கும் உரையாக குடியரசுத் தலைவரின் உரை அமைந்திருக்கிறது என்பதை வேதனையோடு குறிப்பிட நான் கடமைப்பட்டிருக்கிறேன். அவற்றில் சில குறிப்புகளை நான் சுட்டிக்காட்ட விளைகிறேன்.

Advertisment

25 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டிருப்பதாக சிலாகித்து பேசி இருக்கிறார் குடியரசுத் தலைவர். ஆனால், இன்னும் கோடான கோடி மக்கள் வறுமையிலே உழன்றுக் கொண்டிருக்கிறார்கள். விலைவாசி உயர்வால் அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது குடியரசுத் தலைவரின் பார்வைக்கு வரவில்லையோ என்கிற வேதனை மிஞ்சுகிறது. மூன்று கோடி வீடுகளை புதிதாக கட்டப் போவதாகவும் பெருமை பொங்கக் கூறியிருக்கிறார் குடியரசுத் தலைவர். கடந்த கூட்டத்தொடரின் போது குடியரசுத் தலைவர் அறிவித்த பல அறிவிப்புகளை இந்த கூட்டத்திலும் அறிவித்து இருக்கிறார். அதிலே ஒன்றுதான் இந்த வீடு கட்டும் திட்டம். பிரதமரின் வீடு கட்டும் திட்டம் கடந்த முறை 54,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அதில் 32,400 கோடி மட்டுமே செலவழித்து இருக்கிறது அரசு. சரிபாதியாக செலவை குறைத்து 22,100 கோடி ரூபாய் செலவிடவில்லை. இதனால் பிரதமரின் இந்த வீடு கட்டும் திட்டம் முழுமையாக நிறைவடையவில்லை. ஆங்காங்கே தொடங்கிய பணிகள் அப்படியே கிடக்கின்றன. ஒதுக்கிய நிதியும் விரயம் ஆகிறது. மக்களுக்கு வீடும் கிடைக்கவில்லை. இலக்கும் எட்டப்படவில்லை என்பது எவ்வளவு வேதனைக்குரியது என்பதை தயவு கூர்ந்து எண்ணிப் பார்க்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

ஒரு வீடு கட்டுவதற்கு இந்திய ஒன்றிய அரசு 1,20,000 ரூபாய் தான் பொறுப்பேற்கிறது. 40% மாநில அரசு பொறுப்பு அந்த வகையிலே 70,000 ரூபாயும் கூடுதலாக 50,000 ரூபாயும் என ரூ.1,20,000 மாநில அரசு தருகிறது. அத்துடன் 100 நாள் வேலை திட்டத்தின் படி ஒரு 27,000 ரூபாய்க்கான பொறுப்பையும் மாநில அரசு ஏற்றுக்கொள்கிறது. 280 சதுர அடியிலே வீடு கட்டுவது என்கிற நிலையில் வெறும் 2,67,000 ரூபாயில் எப்படி கட்டி முடிக்க முடியும் என்பதை தயவு கூர்ந்து எண்ணிப் பார்க்க வேண்டும். ஆகவே தான் சொல்கிறேன் இது வெறும் பகட்டுரை ஏமாற்றம் அளிக்கும் உரை.

ஒரு சதுரஅடிக்கு குறைந்தது 2000 ரூபாய் என்று எடுத்துக் கொண்டால் கூட 280 சதுர அடிக்கு குறைந்தது 5 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலினின் கலைஞரின் கனவுத் திட்டம் என்கிற பெயரில் 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வீடு கட்டி தரப்படுகிறது. மாநில அரசு அந்த பொறுப்பை ஏற்றிருக்கிறது. ஆகவே பிரதமரின் பெயரால் வீடு கட்டும் இந்த திட்டத்திற்கு குறைந்தது 5 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்ய வேண்டும், அதனை முழுமையாக கட்டி முடிப்பதற்குரிய அனைத்து பணிகளையும் கண்காணிக்க வேண்டும், ஆவணம் செய்ய வேண்டும் என இந்த நேரத்திலே நான் வலியுறுத்த கடமைப்பட்டிருக்கிறேன்.

மிக முக்கியமாக பட்டியல் சமூகத்தினருக்கு என்று துணை திட்டம் உள்ளது பழங்குடியினருக்கும் துணைத் திட்டம் உள்ளது. SCST Sub plan படி பார்க்கிறபோது மக்கள் தொகை கணக்கின்படி 15 சதவீத அளவில் நிதியை பட்டியல் சமூகத்தினருக்கு என்று ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஏழரை சதவீதம் பழங்குடி மக்களுக்கு என்று ஒதுக்கீடு செய்ய வேண்டும். அதுதான் துணை திட்டத்தின் அடிப்படையாகும். ரூ.50,65,000 கோடி அதனுடைய செலவுத்திட்டம் என இந்த அரசு அறிவித்திருக்கிறது. அதில் 15% என்று எடுத்துக்கொண்டால் ரூ.7,59,081 கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும். அதுதான் நியாயமானது, ஆனால் வெறுமனே ரூ.1,68,478 கோடி ஒதுக்கீடு செய்து ஐந்து லட்சத்து 91 ஆயிரம் 5,91,000 கோடி ரூபாய் ஏறத்தாழ 6 லட்சம் கோடியை மறைக்கிறார்கள் அல்லது செலவிட மறுக்கிறார்கள்.

இது இந்த மக்களை ஏமாற்றுகிற வஞ்சிக்கிற மிக மோசமான நடவடிக்கை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அதே போல் தான் பழங்குடியினருக்கும் ஏமாற்றப்படுகிறது. மிக முக்கியமான இன்னொன்றையும் குறிப்பிட விரும்புகிறேன். பட்டியல் சமூகத்தினருக்கும் பழங்குடியினருக்கும் சிறுபான்மையினருக்கும் ப்ரீ மெட்ரிக் ஸ்காலர்ஷிப், போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் என்ற கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

கடந்த பட்ஜெட்டில் 6,360 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் 760 கோடி ரூபாயை செலவு செய்யவில்லை. கடல் கடந்து படிக்கக்கூடிய மாணவர்களுக்கான ஸ்காலர்ஷிப் (Overseas Scholarship) மிக சொற்பமாக ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இது இந்த மக்களுக்கு செய்யப்படுகிற ஒரு ஓரவஞ்சனை என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன். மிக முக்கியமாக சிறுபான்மை சமூகத்தினரை சார்ந்த மாணவர்களுக்கு ப்ரீமெட்ரிக் ஸ்காலர்ஷிப் போன முறை அறிவித்த 326 கோடி ரூபாயில் வெறும் 90 கோடி ரூபாய்தான் செலவு செய்திருக்கிறார்கள். இப்போது ரூ.195 கோடி தான் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது.

போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப்பில் கடந்த முறை 1145 கோடி அறிவிக்கப்பட்டு அதில் வெறும் 344 கோடி தான் செலவு செய்யப்பட்டிருக்கிறது. இப்போது அதையும் ரூ.700 கோடி குறைத்து ரூ.413.9 கோடி தான் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இது திட்டமிட்டு சிறுபான்மையினரின் கல்வியை அழித்தொழிக்கக்கூடிய சிதைக்கக் கூடிய அவர்களை இருட்டிலே தள்ளக்கூடிய ஒரு மோசமான சதி முயற்சி என நான் குறிப்பிட கடமைப்பட்டிருக்கிறேன். குடியரசுத் தலைவர் உரை பாஜக அரசை பாராட்டுகிற வெறும் பகட்டுறையாக தான் இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

Thirumavalavan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe