இந்திய இராணுவத்தில் நான்கு ஆண்டுகள் மட்டும் பணிபுரியும் வகையில் புதிய ஆள்சேர்க்கும் முறையான ‘அக்னிபத்’ திட்டத்திற்கு மத்திய அரசு சமீபத்தில் அனுமதி அளித்தது. இந்த அறிவிப்பு வெளியான நாள் முதல் பீகார், உத்தரப்பிரதேசம், தெலங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களில் பெரும் போராட்டம் வெடித்துள்ளது. இப்பணிகளில் பெறுவோருக்கு பல்வேறு அரசுப் பணிகளில் முன்னுரிமை வழங்கப்படும் என பாஜக ஆளும் மாநில அரசுகளும், மத்திய அரசின் சில துறைகளும் அறிவித்துள்ளன.
இருப்பினும், பல்வேறு மாநிலங்களில் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், அக்னிபத் திட்டத்தின் கீழ், ஆட்சேர்ப்பு குறித்த விவரங்களை இந்திய விமானப்படை வெளியிட்டது. அதில் சேருவதற்கான தகுதி, மருத்துவத் தரநிலைகள், மதிப்பீடு, விடுப்பு, ஊதியம், ஆயுள் காப்பீட்டுத் தொகை போன்றவை குறித்த விவரங்கள் இதில் அடங்கியுள்ளன. அதன்படி,
1. நான்கு ஆண்டு பணியின்போது IAF அக்னி வீரர்களுக்கு பிரத்தியேக சீருடை வழங்கப்படும்.
2. அக்னி வீரர்கள் அரசின் கௌரவங்கள் மற்றும் விருதுகளுக்குத் தகுதியுடையவர்கள்.
3. அக்னி வீரர்களின் தனிப்பட்ட திறன்கள் குறித்து பதிவேற்றப்பட்ட உயர்தர ஆன்லைன் தரவுத்தளத்தை IAF பராமரிக்கும். இதில் உள்ள தரவுகளின் அடிப்படையில் வீரர்களின் திறன் மதிப்பிடப்படும்.
4. இவர்களுக்கு வருடத்திற்கு 30 நாட்கள் விடுப்பு வழங்கப்படும். மேலும், மருத்துவ ஆலோசனையின் பேரில் உடல் நலம் இல்லாதோருக்குக் கூடுதல் விடுப்பும் வழங்கப்படும்.
5. நான்கு ஆண்டுகள் முடிவதற்குள் அக்னி வீரர்கள் அவர்களின் சொந்த கோரிக்கையின் பேரில் பணியிலிருந்து விடுவிக்கப்பட மாட்டார்கள். விதிவிலக்கான சில சூழல்களில் மட்டும் தகுதி வாய்ந்த அதிகாரியின் ஒப்புதலுடன் அவர்கள் விடுவிக்கப்படலாம்.
6. இந்தத் திட்டத்தின் கீழ் பணியாற்றும் நபர்களுக்கு மாதம் ₹30,000 சம்பளமும், அதன் பின் நிலையான சம்பள உயர்வும் வழங்கப்படும். இது தவிர உடை மற்றும் பயணப்படி போன்றவை தனியாக வழங்கப்படும்.
7. ஒவ்வொரு அக்னி வீரரின் வருமானத்தில் 30% அக்னி வீரர்கள் சேவா நிதி தொகுப்பு திட்டத்தின் கீழ் பிடித்தம் செய்யப்படும். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இத்தொகையைப் பெற வீரர்கள் தகுதி பெறுவார்கள். பொது வருங்கால வைப்பு நிதிக்கு இணையான வட்டி விகிதத்தை இதற்கு அரசாங்கம் வழங்கும். மேலும், இதற்கு வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.
8. பணி ஓய்வு பெற்ற பிறகு மீண்டும் ஆயுதப்படையில் சேர்வதற்கு அக்னி வீரர்களுக்கு உரிமை இருக்காது. இப்படியான மறுதேர்வு என்பது அரசாங்கத்தின் பிரத்தியேக அதிகார வரம்பிற்கு மட்டுமே உட்பட்டு இருக்கும்.
9. அக்னிபாத் திட்டத்தின் கீழ் விமானப்படையில் சேர்க்கப்படும் அக்னிவீரர்களுக்கு, அவர்களுடைய பணிக் காலத்தின் போது ரூ.48 லட்சம் வரையிலான ஆயுள் காப்பீடு வழங்கப்படும்.
18 வயதுக்குட்பட்டவர்களும் இதில் சேரலாம். ஆனால், அவர்களின் சேர்க்கை படிவத்தில் தங்கள் பெற்றோரால் கையொப்பமிடப்பட வேண்டும்.