
பள்ளி மாணவிகளை பாலியல் துன்புறுத்தப்பட்டதாகவும், கட்டாய மத மாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும் எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலத்தில் பதற்றம் நிலவுகிறது.
ராஜஸ்தான் மாநிலம், பீவார் அருகே மசூதா பகுதியில் உள்ள பள்ளி மாணவிகளை சமூக ஊடகம் மூலம் சில நபர்கள் தொடர்பு கொண்டுள்ளனர். சிறுமிகளுக்கு மொபைல் போன்களைப் பரிசாகக் கொடுத்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அவர்களை மிரட்டி கட்டாய மத மாற்றம் முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவிகள் போலீசில் புகார் அளித்தனர். சில சிறுவர்கள் நெருக்கமான புகைப்படங்களைப் பயன்படுத்தி தங்களை மிரட்டுவதாகவும், பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாகவும் புகாரில் தெரிவித்தனர். அந்த புகாரின் பேரில், மூன்று சிறுவர்கள் உள்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், இந்த வழக்கில் முன்னாள் வார்டு கவுன்சிலர் ஹக்கீம் குரேஷியையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாலும், சிறுமிகள் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாலும் அங்கு பதற்றம் நிலவுகிறது.குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று பல அமைப்புகள் பேரணிகள் நடத்தி வருகின்றனர். மேலும், மசூதா மற்றும் அருகில் உள்ள பகுதிகளில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால், அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருக்க அந்த பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டள்ளன.