Skip to main content

தொடரும் வன்முறை; பா.ஜ.கவின் போராட்டத்தால் பதற்றம்!

Published on 23/05/2024 | Edited on 23/05/2024
Tension due to BJP's struggle in west bengal

மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதன்படி, ஐந்து கட்டமாக 430 மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து, அடுத்தடுத்த கட்டத் தேர்தலை எதிர்கொண்டு அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், ஆறாம் கட்டத் தேர்தல் நாளை மறுநாள் (25-05-24) 57 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் இன்று (23-05-24) மாலை 6 மணியுடன் முடிவடைகிறது.

மொத்தம் 40 தொகுதிகள் கொண்ட மேற்கு வங்கத்தில் 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதில் ஆறாம் கட்டமாக 8 தொகுதிகளில் மே 25ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கிடையில், சில நாட்களாக பல நாட்களாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினருக்கும், பா.ஜ.கவினருக்கும் தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் நடைபெறுவதாக தகவல் வெளியாகி வந்தது.

இந்த நிலையில், இந்த வன்முறை சம்பவத்தில் பா.ஜ.க கட்சியினர், தங்களின் பெண் தொண்டரில் ஒருவரான ரோட்டிபாலா ஆரி மர்மமான முறையில் உயிரிழந்து விட்டதாகவும், ஏழு பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறி பா.ஜ.க.வினர் இன்று (23-05-24) நந்திகிராம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், டயர்களை எரித்தும், கடை உட்பட பல இடங்களில் தீ வைத்தும் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இது குறித்து மேற்கு வங்க பா.ஜ.க தலைவர் சுபேந்து அதிகாரி கூறுகையில், “முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக்கின் தூண்டுதலின் நேரடி விளைவுதான் இது. அவர்கள் தோல்வி நெருங்கி விட்டது என்று தெரிந்தும் இந்தக் காட்டுமிராண்டித்தனமான கொலையைத் திட்டமிட்டுள்ளனர். பா.ஜ.க முடிவு காணும். சட்டரீதியாக பழிவாங்கப்பட்டு, ஜனநாயக ரீதியாக தகுந்த பதில் அளிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

“நீட் தேர்வில் பணம் கொடுப்பவர்களுக்கு ஆணையம் சாதகமாக இருக்கிறது” - செல்வப்பெருந்தகை

Published on 19/06/2024 | Edited on 19/06/2024
Selvaperunthagai strongly oppose NEET exam

சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகில் திராவிடர் மாணவர் கழகம் சார்பில் இனியும் தேவையா நீட் என்ற தலைப்பில் ஒன்றிய அரசை நீட் தேர்வு ரத்து செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கி.வீரமணி, திமுக செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ், இளங்கோவன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை, விசிக தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி ராமகிருஷ்ணன், திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் ப்ரூஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இதில் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, “அரியலூர் அனிதா மரணத்திற்குப் பின்னர் நீட் தேர்வு தேவையா எனத் தேசம் முழுவதும் கேள்வி எழுந்தது. ஜெயலலிதா இருந்தவரை அனுமதிக்காத நீட் தேர்வு எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் உள்ளே நுழைந்து. தமிழ்நாடு அரசு அனுப்பிய நீட் ரத்து மசோதாவைக் கேள்வி மேல் கேள்வி கேட்டு ஆளுநர் திருப்பி அனுப்பினார். இப்படி ஒரு ஆளுநர் தமிழ்நாட்டிற்கு இதுவரை அமைந்ததில்லை. நீட் தேர்வு காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தான் வந்தது என ஒரு பரப்புரையைச் செய்து வருகிறார்கள். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் உச்ச நீதிமன்றத்தின் தடுப்பணையில் நீட் இருந்தது. ஆனால் மோடி ஆட்சிக்கு வந்ததுக்குப் பிறகு சங்கல்ஃப் என்ற இயக்கம் மனுதாரராகப் போய் நிட்டை நடத்தலாம் என அனுமதியைப் பெற்றுக் கொண்டு வந்தார்கள். 

நீட் நடத்துவதில் ஆளுநரும், பிரதமரும் தீர்மானமாக உள்ளனர். நீட் என்பது பல கோடி வருமானம் தரக்கூடிய விஷயமாக மாறி உள்ளது. நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்வது, ஆசிரியர்களே தேர்வு எழுதுவது, சட்டத்தில் இல்லாததை எல்லாம் மோடியின் அரசு நீட்டில் நடைமுறைக்கு கொண்டு வருகிறது. நீட் வணிகமயமாக்கப்பட்ட பிறகு ஒவ்வொரு பள்ளிகளிலும் நீட் பயிற்சி மையங்கள் அலுவலகத்தை திறக்கிறார்கள். பள்ளிகளில் சேர வேண்டும் என்றால் நீட் தேர்விற்கும் இலட்ச கணக்கில் பணத்தை கட்ட வேண்டும். கிராம புறமானவர்கள் எப்படி இதில் சேர முடியும்? ஏழை எளிய மாணவர்கள் இந்த தேர்வில் எப்படி தேர்ச்சி பெறுவர்? இது சாதாரண மக்களுக்கே தெரியும் போது மாமனிதன் என்று சொல்லக்கூடிய மோடிக்கும், மத்திய அரசுக்கும் தெரியவில்லை. 

நீட் தற்கொலைகள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்த தற்கொலை விவாகரத்தில் பிரதமர், மத்திய அரசும் மௌனமாக இருக்கிறார்கள். தமிழ்நாட்டு குழந்தைகள் தேர்வு எழுதச் சென்றால் ஆடையை கத்தரிப்பது, தாலி உள்ளிட்ட ஆபரணங்களைக் கழட்ட சொல்லும் ஆணையம், பணம் கொடுப்போருக்குச் சாதகமாக இருக்கிறது. தேசிய தேர்வு முகமையில் எப்படிப்பட்ட அநியாயம் நடந்து கொண்டிருக்கிறது. சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமாரை வலது இடது புறங்களில் வைத்துக்கொண்டு நடக்கும் இந்த ஆட்சி எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்று தெரியாது. திமுக தலைவர் ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதி இப்போதே நிறைவேறுவதற்கு வாய்ப்பு உள்ளது. நீட் தேர்வை மாநிலங்கள் எப்போது ஏற்றுக் கொள்கிறதோ அப்போது நடத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும். அதுவரை நீட் எதிர்ப்பு போராட்டம் தொடர வேண்டும்” விடக்கூடாது" என்றார்.

Next Story

'என்னை கங்கை மாதா தத்தெடுத்துள்ளார்'- மோடி பேச்சு

Published on 18/06/2024 | Edited on 18/06/2024
mn

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக பாஜக ஆட்சி தொடரும் நிலையில் இந்தியாவின் ஜனநாயக மதிப்பு மக்களவைத் தேர்தலும் நிரூபணம் ஆகி விட்டதாக பிரதமர் மோடி பேசி உள்ளார். மேலும் கங்கை மாதா தன்னை தத்தெடுத்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

வாரணாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பின்பு முதன்முறையாக பிரதமர் மோடி வாரணாசிக்கு சென்றுள்ளார். அங்கு நடைபெற்ற 'பிஎம் கிசான் சமேலன்' என்கின்ற விவசாயிகளுக்கு நேரடியாக வங்கிக் கணக்கில் நிதி உதவி செலுத்தும் திட்டத்தின் 17 வது தவணையாக 20000 கோடி ரூபாயை விடுவித்திருக்கிறார். இதில் உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்பொழுது மேடையில் பேசிய பிரதமர் மோடி, ''மூன்றாவது முறையாக ஒரு அரசு அமைவது என்பது அபூர்வமான ஒரு செயல் மூன்றாவது முறையாக தான் பிரதமராக வேண்டும் என நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கு நன்றி. காசி வாழ் மக்கள் நாடாளுமன்ற உறுப்பினரை மட்டுமல்லாமல் நாட்டின் பிரதமரையும் தேர்வு செய்துள்ளனர்.

இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு. மூன்றாவது முறையாக நானே பிரதமராக வரவேண்டும் என்பதற்காக நம்பிக்கை வைத்து வாக்களித்த அத்தனை வாக்காளர்களுக்கும் எனது நன்றி. இந்த தொகுதி வெறும் நாடாளுமன்ற உறுப்பினரை மட்டும் தேர்ந்தெடுக்க வில்லை மாறாக நாட்டின் பிரதமரை தேர்ந்தெடுத்திருக்கிறது. அதற்காக உங்கள் அனைவருக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். வலுவான அரசாக பாஜக அரசு அமைந்திருக்கிறது. அதன் காரணமாக ஏழைகள் மற்றும் விவசாயிகள் சார்ந்த நலத்திட்டங்கள் தொடர்ச்சியாக செயல்படுத்தப்படும். மூன்றாவது முறையாக என்னை கங்கை மாதா தத்தெடுத்துள்ளார்''  என நெகிழ்ச்சியுடன் உரையாற்றினார்.