/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Untitled-1_919.jpg)
தெலுங்கானா மாநிலம் லிங்கபூர் மாவட்டத்தில் உள்ள கும்னூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சூர்ய தேவ். இவர் தெலுங்கான திரைப்படத்துறையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கடந்த மூன்று வருடத்திற்கு முன்பு சிர்பூர் கிராமத்தை சேர்ந்த கனக லால் தேவி என்பவருடன் சூர்ய தேவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்த பழக்கம் நெருக்கத்தை அதிகரிக்க இருவருக்குள்ளும் காதல் மலர்ந்துள்ளது. அதனைத் தொடர்ந்து இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக சூர்ய தேவ் கனக லால் தேவியிடம் இருந்து விலகி சென்றுள்ளார்.
இதற்கிடையே, புல்லாரா கிராமத்தை சேர்ந்த ஜல்கர் தேவி என்ற பெண்ணுடன் சூர்ய தேவுக்கு அறிமுகம் ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு சூர்ய தேவ்,ஜல்கர் தேவியை காதலித்து வந்துள்ளார். இந்த விவகாரம் முன்னாள் காதலி கனக லால் தேவிக்கு தெரிய வந்திருக்கிறது. இதனால் கடும் கோவமடைந்த அவர், தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு சூர்ய தேவை வலியுறுத்தியுள்ளார். மேலும், நடந்த விஷயத்தைக் கிராம முக்கியஸ்தர்களிடம் கூறி முறையிட்டு இருக்கிறார்.
இதுகுறித்து கிராம முக்கியஸ்தர்கள் முன்னிலையில் நடந்த பேச்சு வார்த்தையில், சூர்ய தேவ்முன்னாள் காதலி கனக லால் தேவியை திருமணம் செய்துகொள்வதாக ஒப்புக்கொண்டார். அதே சமயம் தற்போதைய காதலியான ஜல்கர் தேவியை தனக்கு பிடித்து இருப்பதாக கூறிய சூர்ய தேவ், அவரையும் திருமணம் செய்துகொள்வதாக கூறி உறவினர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். இரு பெண்களையும் எந்த வித வேறுபாடு இன்றி சமமாக நடத்துவேன் என்றும், இருவரையும் ஒரே வீட்டில் ஒற்றுமையாக வாழவைப்பேன் என்றும் சூர்ய தேவ் உறுதியளித்தார். அதனைத் தொடர்ந்து, கனக லால் தேவி மற்றும் ஜல்கர் தேவி இருவரும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து மூன்று வீட்டாரின் சம்மதத்துடன், கிராம முக்கியஸ்தர்களின் முன்னிலையில் பழங்குடியின பழக்க வழக்கத்தின் படி கடந்த 27 ஆம் தேதி இரு பெண்களையும் ஒரே மண்டபத்தில் வைத்து சூர்ய தேவ் திருமணம் செய்துகொண்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், ஒரு தரப்பினர் திருமண வாழ்த்துகளையும், மற்றொரு தரப்பினர் ஒரே நேரத்தில் இரு பெண்களை எப்படி திருமணம் செய்து கொள்ளலாம்? என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)