Skip to main content

ட்ரம்புக்கு சிலை வைத்து பூஜை செய்யும் விவசாயி!

Published on 19/02/2020 | Edited on 19/02/2020

ட்ரம்புக்கு சிலை வைத்ததுமட்டுமல்லாமல் கடவுளாக்கி தினசரி அபிஷேகம் செய்து வழிபடும் தெலங்கானாவைச் சேர்ந்த விவசாயி. 
 

trump

 

 

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ட்ரம்ப் ஆகிய இருவரும் இரண்டு நாட்கள் அரசுமுறை பயணமாக இந்தியா வர உள்ள நிலையில் குஜராத்தின் குடிசை பகுதிகள் சுவர் எழுப்பி மறைக்கப்பட்டு வருகின்றன.

கடந்த வாரம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் தொலைபேசியில் உரையாடினர். இந்த சூழலில், இருநாட்டு உறவுகளையும் மேம்படுத்தும் விதமாக ட்ரம்ப் மற்றும் மெலனியா ட்ரம்ப் ஆகிய இருவரும் வருகிற 24 மற்றும் 25 ஆகிய இரு நாட்கள் இந்தியாவில் பயணம் மேற்கொள்கின்றனர் என வெள்ளை மாளிகை தரப்பில் அறிவிப்பு வெளியானது. இதில் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகருக்கு ட்ரம்ப் செல்கிறார். 

அகமதாபாத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான மோதிரா கிரிக்கெட் அரங்கை அதிபர் ட்ரம்ப், பிரதமர் மோடி ஆகிய இருவரும் திறந்து வைக்கின்றனர். அதன்பின் பல்வேறு நிகழ்ச்சிகளில் ட்ரம்ப் பங்கேற்கிறார்.

கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தெலங்கானாவை சேர்ந்த விவசாயி ஒருவர் அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு ஆறு அடி உயர சிலையை நிறுவியிருந்தார். ட்ரம்பின் தீவிர விசிறியான இவர் தற்போது அந்த சிலைக்கு பூஜை மேற்கொண்டு வருகிறார். ட்ரம்ப் சிலைக்கு நெற்றியில் திலகம் வைத்து, மாலை அணிவித்து ஆரத்தி எடுத்து, பாலபிஷேகம் வழிபடுகிறார். விவசாயின் கனவில் ட்ரம்ப் வந்ததால் ஒரு வருடத்திற்கு முன்பு தன்னுடைய கிராமத்தில் ட்ரம்பிற்காக சிலை நிறுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ட்ரம்ப் ஒரு வலிமையான தலைவர், அவரது துணிச்சலான செயல்பாடுகள் பிடித்ததால் அவருக்கு சிலை வைத்து வழிபடுகிறேன் என்று சிலை வைத்ததற்கு விளக்கமளித்துள்ளார் விவசாயி கிருஷ்ணா. மேலும் இந்த சிலையை நிறுவ சுமார் ஒரு லட்சத்து முப்பதாயிரம் ரூபாய் செலவு செய்ததாக கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பூச்சிக்கொல்லி மருந்தா? பயிர்க்கொல்லி மருந்தா? - போராடும் விவசாயிகள்! நடவடிக்கை எடுக்கத் தயங்கும் அதிகாரிகள்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Farmers struggle at Pudukkottai District Collectorate

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் சேர்பட்டி அருகே மறவனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செந்தில்குமார் 10 ஏக்கரில் நெல் பயிர் நடவு செய்துள்ளார். கதிர் வரும் நிலையில் இலைசுருட்டுப்புழு காணப்பட்டதால் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள ஒரு தனியார் பூச்சிக்கொல்லி மருந்துக் கடையில் பூச்சிக்கொல்லி மருந்து வாங்கிச் சென்று 8.5 ஏக்கருக்கு தெளித்துள்ளார்.

பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து சில நாட்களில் பயிர்கள் கருகத் தொடங்கி ஒரு வாரத்தில் முழுமையாக கருகியது. சம்பந்தப்பட்ட மருந்துக் கடையில் கேட்டதற்கு சரியான பதில் இல்லாததால் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டார் விவசாயி செந்தில்குமார். இதனையடுத்து வயலுக்கே வந்து ஆய்வு செய்த வேளாண்துறை அதிகாரிகள் பூச்சிக்கொல்லி மருந்தால் தான் பயிர்கள் கருகிவிட்டதாக சான்றளித்தனர்.

இதனையடுத்து விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக்கடை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், வியாழக்கிழமை தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் துணைச் செயலாளர் சேகர் முன்னிலையில் ஏராளமான விவசாயிகள் கருகிய பயிர்களுடன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்தனர்.

கருகிய பயிர்களுடன் வந்த விவசாயிகளை ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்காததால் நுழைவாயிலிலேயே கருகிய பயிர்களை கொட்டியும் கையில் வைத்துக் கொண்டும் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அங்கு வந்த போலீசாரும் வருவாய்த் துறை அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகக் கூறிய பிறகு ஆட்சியர் அலுவலக நுழைவாயில் போராட்டத்தை விவசாயிகள் முடித்துக் கொண்டனர்.

ஆனால் வேளாண்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் பிச்சத்தான்பட்டியில் திருச்சி மாவட்ட விவசாயிகள் இருவர் செல்போன் கோபுரத்தில் ஏறிவிட்டனர். அதேபோல மற்றொரு குழு விவசாயிகள் விராலிமலை வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்திற்குச் சென்ற விவசாயிகள் அலுவலகத்திற்குள் நுழைந்து நடவடிக்கை எடுக்கும் வரை போகமாட்டோம்  என்று அங்கேயே படுத்துவிட்டனர்.

அதன் பிறகே சம்பந்தப்பட்ட விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக் கடையை அதிகாரிகள் மூடினர். பூச்சிக்கொல்லி மருந்து கேட்டால் பயிர்க்கொல்லி மருந்து கொடுத்து 8.5 ஏக்கர் நெல் பயிர்களைக் கொன்ற பூச்சி மருந்துக்கடை உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு கீரமங்கலத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகளை புதிய லேபிள் ஒட்டி புதிய மருந்தாக விற்பனைக்கு வைத்திருந்த சுமார் 1500 மருந்துப் பாட்டில்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் இப்போது நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன் என்ற கேள்வி எழுப்புகின்றனர்.

Next Story

ஒயின் ஷாப்புகளில் அதிகவிலை! ஆத்திரத்தில் பெட்டி பெட்டியாக அள்ளிச்சென்ற பொதுமக்கள்!

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
liquor shops are selling liquor bottles at high prices, causing public dissatisfaction in Telangana

தெலங்கானாவில் அதிக விலைக்கு மதுபானம் விற்பனை செய்ததாகக் கூறி, நான்கு ஒயின் ஷாப்புகளை முற்றுகையிட்ட பொதுமக்கள், கடைகளில் இருந்த ரூ.22 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்களை அள்ளிச்சென்றனர். தெலங்கானா, பத்ராத்ரி கொத்தகுடேம் மாவட்டம், தெகுலப்பள்ளியில் MRP விலையைவிட ரூ.20 முதல் ரூ.30 வரை அதிக விலைக்கு, மது விற்பனையாளர்கள் சிண்டிகேட் அமைத்து மது விற்பதாக  மதுப்பிரியர்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

இந்நிலையில், ஆத்திரமடைந்த கிராம மக்கள் மதுக்கடைகள் முன்பு திரண்டு, நான்கு ஒயின்ஷாப்புகளில்  இருந்த  மதுபானங்களை அள்ளிச் சென்றனர். பொது மக்கள் பலரும் மது பாட்டில்களை அள்ளிச்சென்ற நிலையில், அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகளும் மதுபாட்டில்களை எடுத்துச்சென்றனர். இதனை ஊழியர்கள் தடுக்க முயன்றும் முடியாததால், காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

liquor shops are selling liquor bottles at high prices, causing public dissatisfaction in Telangana

இச்சம்பவத்தின்போது, பெரும்பாலும் பெண்களே மதுபாட்டில்களை எடுத்துச் சென்றனர். இதனையடுத்து, டிஎஸ்பி சந்திரபானு தலைமையில் அங்கு வந்த காவல்துறையினர், கடை உரிமையாளர்களின் புகாரின் அடிப்படையில் விசாரித்து வருகின்றனர்.  மொத்தத்தில் சுமார் ரூ.22 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களை பொது மக்கள் அள்ளிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.