ஆதரவற்ற மூதாட்டிக்கு உணவு ஊட்டிவிட்ட காவலர்! - நெகிழவைத்த புகைப்படம்

ஆதரவற்ற நிலையில் சாலையோரம் இருந்த மூதாட்டிக்கு உணவளித்த காவலரின் செயல் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

தெலுங்கானா மாநிலம் குகட்பள்ளியில் உள்ள காவல்நிலையத்தில் போக்குவரத்துக் காவலராக பணிபுரிபவர் பி.கோபால். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தெலுங்கானா மாநில உள்துறை அமைச்சர் நைனி நரசிம்ம ரெட்டியின் வருகையை ஒட்டிய பணியின்போது, ஜவஹர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திற்கு அருகாமையில் உள்ள சாலையோரத்தில் 80 வயதுமிக்க மூதாட்டி ஆதரவற்ற நிலையில் இருப்பதைப் பார்த்துள்ளார்.

அவரிடம் பேசிய காவலர் கோபால், அவருக்கு உணவு வாங்கிவந்து தன் கையாலேயே ஊட்டிவிட்டுள்ளார். இதனைப் படமெடுத்த காவல்துறை உயரதிகாரியின் மக்கள் தொடர்பு அதிகாரி ஹர்ஷா பார்கவி, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படத்திற்கு பலரிடத்திலும் நல்ல ஆதரவு கிடைத்துள்ளது.

இதுகுறித்து பேசிய கோபால், ‘அந்த மூதாட்டி தனது மகன்களால் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டவர். அவரைப் பார்த்தபோது என் தாயின் நினைவு வந்தது. அதனால் அவருக்கு உணவு வாங்கித் தந்தேன். அவரால் அந்த உணவை சாப்பிடக்கூட முடியவில்லை என்பதால், என் கையாலேயே அவருக்கு ஊட்டிவிட்டேன்’ என கூறியுள்ளார்.

தற்போது அந்த மூதாட்டி தெலுங்கானா சிறை நிர்வாகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஆனந்த் ஆஸ்ரம் என்ற காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

telangana
இதையும் படியுங்கள்
Subscribe