Skip to main content

120 அடி ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த சிறுவன்... 12 மணிநேரப் போராட்டம் முடிவுக்கு வந்தது...

Published on 28/05/2020 | Edited on 28/05/2020

 

telangana baby fell into borewell

 

தெலங்கானா மாநிலத்தில் 120 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த மூன்று வயது சிறுவன் 12 மணி நேரப் போராட்டத்திற்குப் பின் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அங்குச் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 


தெலங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தில் உள்ள போச்சன்பள்ளி என்ற கிராமத்தில் வசித்து வருபவர் கோவர்தன். அவரின் விவசாய நிலத்திலிருந்த பயன்படுத்தப்படாத ஆழ்துளைக் கிணறு நீண்ட காலமாக மூடப்படாமல் இருந்துள்ளது. இந்நிலையில் மூடப்படாமல் இருந்த அந்த ஆழ்துளைக் கிணற்றின் அருகே விளையாடிக் கொண்டிருந்த கோவிதனின் மகன் சாய் வரதன் (3), நேற்று மாலை கிணற்றில் விழுந்துள்ளான். இதனையடுத்து மகன் கிணற்றுக்குள் விழுந்ததை அறிந்து குழந்தையை மீட்க முதற்கட்டமாகத் தாயின் சேலை ஒன்றைக் கிணற்றிற்குள் விட்டுள்ளனர் குடும்பத்தினர். அதனைப் பிடித்து அந்தச் சிறுவன் மேல வர முயன்றபோது ஏற்பட்ட மண்சரிவால் குழந்தை கீழே இறங்கத் தொடங்கியது. 

இதனையடுத்து அங்கு வந்த தீயணைப்புத்துறையினர் குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். குழந்தை 25 அடி ஆழம் வரை சென்று இருக்கலாம் எனக் கருதப்பட்டதால், குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்படாமல் இருக்க ஆக்ஸிஜன் அனுப்பப்பட்டது. பின்னர் மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்த ஹைதராபாத் மற்றும் விஜயவாடாவிலிருந்து தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் வரவழைக்கப்பட்டு, ஆழ்துளைக் கிணற்றின் அருகில் 25 அடி ஆழத்திற்குப் பக்கவாட்டில் குழி தோண்டப்பட்டது. சுமார் 12 மணி நேரப் போராட்டத்திற்குப் பின்பு இன்று காலை உயிரிழந்த நிலையில் குழந்தையை மீட்டனர் அதிகாரிகள். 17 அடி ஆழத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு குழந்தை இறந்து விட்டதாகக் குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சிறுவனின் இந்த மரணம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

பேருந்து நிலையத்தில் பிறந்த குழந்தை; சிறப்பு அறிவிப்பை அறிவித்த தெலுங்கானா அரசு

Published on 20/06/2024 | Edited on 20/06/2024
 Telangana Govt announced a special notification on A baby born at a bus station

தெலுங்கானா மாநிலம், கரீம்நகர் மாவட்டத்தில் பேருந்து நிலையம் ஒன்று இயங்கி வருகிறது. கடந்த 16ஆம் தேதி குமாரி என்ற கர்ப்பிணிப் பெண், தனது கணவருடன் பத்ராசலம் செல்வதற்காக இந்த பேருந்து நிலையத்திற்கு வந்தார். 

அப்போது குமாரிக்கு திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டது. இதில் பதற்றமடைந்த அவரது கணவர் உதவிக்காக மாநில போக்குவரத்துக் கழக ஊழியர்களை அழைத்தார். இதனையடுத்து, உடனடியாக ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இருப்பினும், ஆம்புலன்ஸ் வருவதற்குள் குமாரிக்கு பிரசவ வலி அதிகமானதால், அங்கிருந்த போக்குவரத்துக் கழக பெண்கள் ஊழியர்கள் பேருந்து நிலையத்திலேயே குமாரிக்கு பிரசவம் பார்த்தனர்.

இதில், குமாரிக்கு பெண் குழந்தை பிறந்தது. இதனை தொடர்ந்து, தாயையும், குழந்தையையும் ஆம்புலன்ஸ் மூலம் அருகே உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். பேருந்து நிலையத்திலேயே பிரசவம் பார்த்து பெண் குழந்தை பிறந்த சம்பவம் அம்மாநிலம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில், கரீம்நகர் பேருந்து நிலையத்தில் பிறந்ததால் அக்குழந்தைக்கு தெலுங்கானா மாநில சாலை போக்குவரத்து கழகம் ஒரு அற்புதமான அறிவிப்பை அறிவித்தது. அதில், பேருந்து நிலையத்தில் பிறந்த பெண் குழந்தை தனது வாழ்நாள் முழுவதும் மாநில அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்ய சிறப்பு பாஸ் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. 

Next Story

தூங்கிக் கொண்டிருந்த சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்; லாரி டிரைவர் அதிரடி கைது!

Published on 14/06/2024 | Edited on 14/06/2024
Incident happened on 6 years girl in telangana

தெலுங்கானா மாநிலம் பெத்தபள்ளி மாவட்டத்தைச் சேர்ந்தவர் 6 வயது சிறுமி. இவர் நேற்று இரவு அங்குள்ள அரிசி ஆலைக்கு வெளியே தனது தாயுடன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, உத்தரப் பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த லாரி டிரைவரான பால்ராம் என்பவர் சிறுமியைக் கடத்தி சென்று அருகே உள்ள முட்புதரில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளார். 

திடீரென்று நள்ளிரவில் சிறுமியின் தாயார் கண் விழித்து பார்த்துள்ளார். அப்போது, அவரது மகள் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்து, அப்பகுதியைச் சேர்ந்தவர்களை உதவிக்காக அழைத்துள்ளார். அப்பகுதியைச் சேர்ந்தவர்களும், தாயுடன் சேர்ந்து சிறுமியைத் தேடி வந்துள்ளனர். அப்போது, அங்குள்ள முட்புதர் ஒன்றில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த சிறுமியின் உடலை கண்டுபிடித்தனர். மேலும் அப்பகுதி மக்கள், சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த பால்ராமை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்து புகார் அளித்தனர்.

அந்தப் புகாரின் பேரில், பால்ராம் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமராக்களை ஆய்வு செய்த போது, அதில் பால்ராம் சிறுமியைத் தோளில் சுமந்துகொண்டு அருகில் உள்ள முட்புதருக்கு கடத்தி செல்வது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, உயிரிழந்த சிறுமியின் உடலை போலீசார் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தூங்கிக் கொண்டிருந்த சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.