Skip to main content

16 மணி நேரம் ரயில் கழிவறைக்குள் பதுங்கியிருந்த வாலிபர்

Published on 22/08/2023 | Edited on 22/08/2023

 

A teenager who sneak up in the train toilet for 16 hours

 

ஜார்கண்ட் மாநிலம் டாட்டா நகரில் இருந்து கேரளா மாநிலம் எர்ணாகுளம் வரை செல்லும் விரைவு ரயில் நேற்று முன்தினம் (20-08-23) காலை 5:15 மணியளவில் புறப்பட்டு எர்ணாகுளம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. இந்த விரைவு ரயில் முன்பதிவு செய்யப்பட்டிருந்த பெட்டியில் உள்ள ஒரு கழிவறை ரயில் புறப்பட்டதில் இருந்து பூட்டிய நிலையிலேயே இருந்துள்ளது. அந்த பெட்டியில் பயணம் செய்த பயணிகள் பூட்டப்பட்டிருந்த கழிவறைக்குச் செல்ல முடியாமல் தவித்து வந்தனர்.

 

இதற்கிடையே, இந்த ரயில் நேற்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்த போது அந்த கழிவறையில் இருந்து சத்தம் வந்துள்ளது. இதனால் அச்சம் அடைந்த பயணிகள் டிக்கெட் பரிசோதகரிடம் தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து டிக்கெட் பரிசோதகர் ரயில் கட்டுப்பாடு அறைக்குச் சென்று ரயில்வே பாதுகாப்பு படைக்கும், ரயில்வே காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்தார்.

 

இதற்கிடையில், இந்த விரைவு ரயில் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரயில் நிலையத்திற்கு நேற்று மதியம் 2:06 மணிக்கு வந்தது. அப்போது, அந்த ரயில் நிலையத்தில் தயாராக இருந்த பாதுகாப்புப் படையினரும், ரயில்வே காவல்துறையினரும் இணைந்து பூட்டப்பட்டிருந்த கழிவறையைத் திறக்க முயற்சி செய்தனர். ஆனால், அந்த கழிவறையின் கதவை அவர்களால் திறக்க முடியவில்லை. இதனால், ரயில்வே ஊழியர்கள் கழிவறையின் கதவை சுத்தியல் மற்றும் உளியால் அடித்து உடைத்து திறந்தனர்.

 

பாதுகாப்புப் படையினர், அந்த கழிவறைக்குள் சென்று பார்த்தபோது அங்கு 19 வயது மதிக்கத்தக்க வடமாநில வாலிபர் ஒருவர் இருந்தார். அவரை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், அவரது பெயர் சோகன் தாஸ் என்று கூறினார். மேலும், அவர் நேற்று முன்தினம் இரவு முதல் சுமார் 16 மணி நேரத்துக்கு மேல் எதுவும் சாப்பிடாமல் கழிவறைக்குள்ளேயே இருந்ததால் சரிவர பேச முடியாமல் மிகவும் சோர்வுடன் காணப்பட்டார். இதனால், அவரைப் பாதுகாப்பு படையினர் அரக்கோணம் ரயில்வே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

பின்னர், அவர் மனநலம் பாதிக்கப்பட்டது போல் செயல்பட்டதால்  நேற்று இரவு அவரை சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு காவல்துறையினர் பரிசோதனைக்காக அழைத்து சென்றனர். அதனைத் தொடர்ந்து, அவர் ஏன் ரயில் கழிவறைக்குள் பதுங்கியிருந்தார் என்பது குறித்து ரயில்வே காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்