tamilnadu governor meet central minister amit sha at delhi

தமிழ்நாடுஅரசு சார்பில் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் மசோதகளுக்கு ஒப்புதல் அளிக்காதது, மசோதாக்களை கிடப்பில் போடுவது, அரசின் முக்கிய முடிவுகளில் தன்னிச்சையாக செயல்படுவது, அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்குவதாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதிய நிலையில் அந்த முடிவை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது போன்ற செயல்கள் மூலம் ஆளுநர் அரசின் முடிவுகளில் ஆதிக்கம் செலுத்த முயல்வதாக தமிழ்நாடு அரசின் சார்பில் குற்றம் சாட்டப்படுகிறது.

Advertisment

மேலும் பல்வேறு விவகாரங்களிலும் தமிழக அரசுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வரும் நிலையில், ஊழல் வழக்குகளில் சிக்கியுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது நீதிமன்ற விசாரணை தொடங்க அனுமதி அளிக்கவும், நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கவும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆளுநருக்கு அண்மையில் கடிதம் எழுதி இருந்தார். முன்னதாக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும், “ஆளுநர்கள் அரசியல் பேசக்கூடாது” எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisment

இந்நிலையில் நேற்று மாலை 5 மணியளவில் ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லிக்கு சென்றார். இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ஆளுநரின் டெல்லி பயணம் பலராலும் உற்று கவனிக்கப்பட்டு வரும் நிலையில்டெல்லி சென்றுள்ள தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று மத்திய அமைச்சர் அமித்ஷாவை டெல்லியில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரம்,தமிழக அரசியல் சூழல், மணிப்பூர் விவகாரம்,பொது சிவில் சட்டம் குறித்து ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது. ஆளுநர் ஆர்.என்.ரவி, தனது டெல்லி பயணத்தை முடித்து கொண்டுஜூலை 13 ஆம் தேதி மீண்டும் சென்னை திரும்புகிறார்.