Tamilisai Soundararajan says They refuse to come even when invited because it is the festival of God

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானம் நடைபெற்று வருகிறது. இது தற்போது நிறைவடையும் தறுவாயில் உள்ளது. இந்தக் கோயில் இம்மாதம் 22ம் தேதி திறக்கப்படவிருக்கிறது. இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், கோயில் அறக்கட்டளை சார்பில் சமீபத்தில் மொத்தம் 7 ஆயிரம் சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

Advertisment

அதேபோல், ராமர் கோயில் அமைவதற்கு ஆதரவாக இருந்த பத்திரிகையாளர்களுக்கும், ராமர் கோயிலுக்காகப் பாடுபட்ட 50 கரசேவகர்களின் குடும்பத்தினருக்கும், குறைந்தபட்சம் 50 நாடுகளில் இருந்து தலா ஒரு பிரதிநிதிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விழாவில் பங்கேற்க இந்தியா மற்றும் வெளிநாடுகளில் 7,000க்கும் மேற்பட்டவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. அதே சமயம், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, மல்லிகார்ஜுனா கார்கே ஆகியோர் ராமர் கோவில் குடமுழுக்கு விழாவிற்கான அழைப்பை நிராகரித்திருந்தனர். மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சமாஜ்வாதி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் ராமர் கோவில் குடமுழுக்கு விழாவுக்கான அழைப்பை புறக்கணித்துள்ளனர்.

Advertisment

இதற்கிடையில், ராமர் கோவில் குடமுழுக்கு விழா தொடர்பாக திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர். பாலு எம்.பி. விடுத்துள்ள அறிக்கையில், “கடந்த 2014 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வருவதற்கு முன்பு பாஜக தேர்தல் வாக்குறுதிகளை வாரி வழங்கியது. அதில் எந்த வாக்குறுதியை இந்த 10 ஆண்டுகளில் நிறைவேற்றி இருக்கிறார்கள். மத்தியில் ஆட்சிக்கு வந்த பாஜக நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக மக்களுக்கு கொடுத்த எந்த தேர்தல் வாக்குறுதியையும் இதுவரை நிறைவேற்றவில்லை. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லையே என்ற கூச்சமும் பாஜகவுக்கு இல்லை.

அயோத்தி ராமர் கோயில் திறப்பு ஆன்மிக விழா அல்ல. அது அரசியல் விழா. இதனை மறைக்கவும், மக்கள் கவனத்தை திசை திருப்பவும் ராமர் கோயில் கட்டியதை தனது சாதனையாக காட்டி தோல்வியை மறைக்க நினைக்கிறார்கள். இறை நம்பிக்கை என்பது ஒவ்வொரு மனிதரின் விருப்பமும் உரிமையும் ஆகும். ஒருவரது பக்தியை அரசியலுக்கான முதலீடாக மாற்றுவது ஜனநாயகத்துக்கு எதிரானது மட்டுமல்ல, ஆன்மிக அறங்களுக்கே எதிரானது ஆகும். கோயில் கட்டுவதையும், திறப்பதையும் தனது கட்சியின் சாதனையாகக் காட்டி மக்களை ஏமாற்ற மத்திய பாஜக அரசும், பிரதமர் மோடியும் நினைப்பது ஏற்கத்தக்கது அல்ல. ஆன்மிகத் திருவிழாவை பாஜகவின் அரசியல் திருவிழாவாக மாற்ற நினைப்பதை அறிவார்ந்த இந்திய மக்கள் புறந்தள்ளுவார்கள்” எனத் தெரிவித்திருந்தார்.

Advertisment

இந்நிலையில், தெலுங்கானா ஆளுநரும்புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம் எம்.பி. டி.ஆர். பாலு பேசியது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “அரசியலாக்குவது யார்? ஏன் அவர்கள் ராமர் கோவில் திறப்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை. அதனை அரசியல் விழா என்று நினைத்து அவர்கள் தான் கலந்து கொள்ளவில்லை. கடவுளுக்கானவிழாஎன்பதால் அவர்களுக்கு அழைப்பு விடுத்தும்வர மறுக்கிறார்கள். இந்த விழா, ஒவ்வொருவருக்கும் ஒரு நீண்ட கனவு ஆகும்.

அனைத்து தமிழ் மன்னர்களும், பேரரசர்களும் கோவில் கட்டினார்கள்.அவர்கள் தான் முதல் முதலில் திருவிழாவை முன்வைத்தார்கள். கும்பாபிஷேகம் அவர்களால் தான் துவக்கப்பட்டது. தமிழ் கலாச்சாரம் அப்படி இருக்கும்போது, பிரதமர் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை எப்படி எதிர்க்க முடியும். இந்த விழாவை பொறுத்தவரை அவர்கள் தான் அரசியலாக்குகிறார்கள்” என்று கூறினார்.