Skip to main content

“இறைவனையும் யோகாவையும் பிரிக்க முடியாது” - தமிழிசை

Published on 05/01/2023 | Edited on 05/01/2023

 

tamilisai soundararajan and rangasamy are participated in 28th international yoga festival celebration in puducherry 

 

புதுச்சேரி அரசின் சுற்றுலாத்துறை சார்பில் ஆண்டுதோறும் சர்வதேச யோகா திருவிழா ஜனவரி மாதம் முதல் வாரம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு 28-வது சர்வதேச யோகா திருவிழா கருவடிக்குப்பம் காமராஜர் மணிமண்டபத்தில் தொடங்கியது. விழாவில் புதுச்சேரி பொறுப்பு துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமை தாங்கி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இதில் முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் லட்சுமிநாராயணன், சுற்றுலாத்துறை இயக்குனர் பிரியதர்ஷினி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

விழாவில் தமிழிசை சவுந்தரராஜன் பேசுகையில், "யோகா கலை 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இருந்ததாக சரித்திரம் சொல்கிறது. நாகரிகம் என்ன என்பதற்கு முன்பே இந்தியாவில் யோகா பயிற்சி செய்யப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. நம் பகுதியில் பல்லாயிரக்கணக்கான கோவில்களில் நிறுவப்பட்டுள்ள இறைவன் அமர்ந்திருப்பது யோகா நிலையில் தான் இருக்கும். இதனால் தான் இறைவனையும் யோகாவையும் பிரிக்க முடியாது என்று சரித்திரம் சொல்கிறது. இஸ்லாமிய நாடுகள் கூட யோகா தினத்தைக் கொண்டாடுகிறார்கள் என்றால் அதுதான் நமது பெருமை. இயற்கை மருத்துவத்தை விட யோகா சிறந்தது. நோய்கள் எல்லாவற்றிற்கும் தீர்வு உள்ளது என்று கூறுகின்றனர். சரியாக யோகா செய்து சரியாக உணவு உண்டால் மாரடைப்பு வரவே வராது. நம் நாட்டில் உள்ள நல்லதை நாம் எடுத்துக் கொள்ள மறுக்கிறோம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் யோகாவை நாடு முழுவதும் பிரதமர் மோடி கொண்டு சென்றுள்ளார். இதனால் தான் யோகா தினத்தைக் கொண்டாடுகிறோம். புதுச்சேரி அரசு தொடர்ந்து யோகா திருவிழாவை நடத்தி வருகிறது" எனக் கூறினார்.

 

இதனைத் தொடர்ந்து பேசிய புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பேசுகையில், "யோகா திருவிழாவை புதுச்சேரி அரசு தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்த கலை இறைவனால் கொடுக்கப்பட்ட கலை. உலக முழுவதும் பரந்து கிடக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கற்க வேண்டிய கலை யோகா. அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளிக்க ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது" என்று பேசினார். 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

யோகா மாஸ்டர் அடித்து கொலை; விசாரணையில் பகீர்!

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
Transgressive yoga master beaten to ; Body recovery in a ruined well

கராத்தே மாஸ்டர் காணாமல் போன சம்பவத்தில், கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டது  சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியிலுள்ள கானத்தூர் ரெட்டி குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன். இவர் அந்த பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு கராத்தே மாஸ்டராகவும், யோகா மாஸ்டராகவும் பணியாற்றி வந்தார். இவரிடம் பல்வேறு குழந்தைகள் கராத்தே மற்றும் யோகா பயிற்சிகள் எடுத்து வந்த நிலையில் கராத்தே மாஸ்டர் லோகநாதனை கடந்த 13ஆம் தேதியிலிருந்து காணவில்லை என அவரது மகன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்ததோடு காணாமல்போன லோகநாதன் தேடி வந்தனர். லோகநாதன் வைத்திருந்த செல்போனில் அவருடன் இறுதியாக பேசியது யார் என்பது தொடர்பாக போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில் ஓஎம்ஆர் சாலையில் உள்ள நாவலூர் காரனை பகுதியைச் சேர்ந்த சுரேஷ் -கஸ்தூரி தம்பதியிடம் செல்போனில் பேசியது தெரியவந்தது.

சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு பேரையும் காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரித்த விசாரித்தபோது யோகா மாஸ்டர் லோகநாதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட பகீர் தகவல் வெளிவந்தது. செம்மஞ்சேரி பூங்காவில் வைத்து லோகநாதன் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கராத்தே, யோகா பயிற்சிகளை  கொடுத்து வந்த நிலையில் சுரேஷ்-கஸ்தூரி தம்பதியின் 11 வயது மகன் லோகநாதனிடம் பயிற்சிக்காக சேர்க்கப்பட்டு பயிற்சி எடுத்து வந்தான். அதே நேரம் கஸ்தூரியும் அவரிடம் யோகா பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார்.

Transgressive yoga master beaten to ; Body recovery in a ruined well

இந்நிலையில் கஸ்தூரியிடம் லோகநாதன் பாலியல் ரீதியாக தொல்லையில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் லோகநாதனின் பயிற்சி வகுப்புக்கு செல்வதை கஸ்தூரி தவிர்த்து வந்துள்ளார். ஆனால் இருப்பினும் மொபைல் மூலம் கஸ்தூரியை தொடர்பு கொண்ட லோகநாதன் யோகா வகுப்புக்கு வரும்படி தொடர்ந்து வற்புறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கஸ்தூரி இதுகுறித்து கணவரிடம் தெரிவிக்க இருவரும் சேர்ந்து கராத்தே மாஸ்டர் லோகநாதன் கொலை செய்ய திட்டமிட்டனர்.

அவரை மொபைல் மூலம் தொடர்புகொண்டு காரனை பகுதிக்கு வரவழைத்து அடித்து கொலை செய்ததோடு அங்குள்ள பாழடைந்த கிணற்றில் உடலை வீசிவிட்டுச் சென்றது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கிணற்றில் இருந்த லோகநாதனின் உடலை கயிறு மூலம் கட்டி வெளியே கொண்டு வந்தனர். யோகா மாஸ்டர் அடித்து கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

புதுச்சேரி அரசின் சுற்றுலா மேம்பாடு; 'ஒண்டர்ஸ் ஆஃப் ஒய்ட் டவுன்'  மியூசியம் திறப்பு

Published on 17/01/2024 | Edited on 17/01/2024
Opening ceremony Of Artist AP Shreethar's Wonders of White Town 

ஓவியங்கள் மூலம் உலக அளவில் பெயர் பெற்றவர் ஏ.பி.ஸ்ரீதர். இவருடைய கைவண்ணத்தில் விண்டேஜ் கேமரா, கிளிக் ஆர்ட், 3டி ஓவியம், மெழுகு சிலை உள்ளிட்ட பலவகை உள்ளது. தற்போது இவரது கைவண்ணத்தில் புதுச்சேரியின் பாரம்பரியமிக்க ஒய்ட் டவுன்-இல் பிரம்மாண்ட கலாச்சார நிறுவனம் 'ஒண்டர்ஸ் ஆஃப் ஒய்ட் டவுன்' என்ற மியூசியம் தைத்திருநாளை முன்னிட்டு ஜனவரி 15-ஆம் தேதி மாண்புமிகு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அவர்களால் திறக்கப்பட்டு இருக்கிறது.

வில்லா குகா, ரூ சுஃப்ரென், புதுச்சேரி - 605001 என்ற முகவரியில் உருவாகி இருக்கும் 'ஒண்டர்ஸ் ஆஃப் ஒய்ட் டவுன்', இந்தியாவின் அருங்காட்சியக மனிதராக அறியப்படும் ஏ.பி.ஸ்ரீதர் மற்றும் திரு.வே.குகன் இணைந்து உருவாக்கி உள்ளனர்.

லைவ் ஆர்ட் மியூசியம், டெடி மியூசியம் மற்றும் ஃபிஷ் மியூசியம் என மூன்று பிரத்யேக அருங்காட்சியகங்கள் இதில் இடம் பெற்றுள்ளது. இந்த கலை மற்றும் கலாச்சார மையத்தை கட்டடத்துறையில் புகழ்பெற்ற அகிலன் ஆர் வடிவமைத்துள்ளார். மெழுகு சிலை சிற்பங்கள், கொண்ட லைவ் ஆர்ட் மியூசியத்தில் உலகின் பிரபல தலைவர்களான மகாத்மா காந்தி, அப்துல் கலாம், மதர் தெரேசா, ரவீந்திரநாத் தாகூர் உள்ளிட்ட பலர் தத்ரூபமாக இருக்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் உலகின் மிக உயரமான மனிதன் மற்றும் குள்ளமான மனிதன் பார்க்க உண்மையாகவே காட்சியளிக்கும் சிலிகான் சிலைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

டெடி (Teddy) மியூசியம் மனித குலத்தின் சர்வதேச அழகியல், குழந்தை பருவ நினைவுகளை கொண்டாடும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. 195 நாடுகளின் பாரம்பரிய மிக்க உடைகளில் 500 டெடி பொம்மைகள் மறு உருவாக்கம் செய்யப்பட்டு இருக்கிறது. ஃபிஷ் (Fish) மியூசியத்தில் நீருக்கடியில் உள்ள எண்ணற்ற உயிரினங்களை தழுவி உருவாக்கப்பட்ட சிற்பங்கள் வைக்கப்பட்டுள்ளன.

இந்த மியூசியத்தை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்து ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர் மற்றும் அவரது குழுவினரை வாழ்த்தினார். மேலும் அவர் கூறும்போது, மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ள, தலைவர்களின் சிலிகான் சிலைகள் சிறப்பான முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் இந்த மியூசியம் அமைந்து இருப்பது பாராட்டுக்குரியது. சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள், சிறுவர்கள், இளைஞர்கள் இந்த மியூசியத்தை பார்ப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது இருக்கிறது. கலையம்சம் பொருந்திய நல்ல அருங்காட்சியம் அமைந்து இருப்பது சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் பிடிக்கும். சுற்றுலாவுக்கு புதுச்சேரி அரசு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இதற்கு உறுதுணையாக இந்த அருங்காட்சியகம் அமைந்து இருப்பது எங்களுக்கு சிறப்பு என்று பாராட்டி கூறினார்.