டெல்லியில் ஒன்றுகூடிய தமிழக விவசாயிகள்! - ஐநா தகவல் மையம் முன்பு திரண்டதால் பரபரப்பு!

Tamil Nadu farmers struggle  in front of UN Information Center ..!

டெல்லியில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தகவல் மையம் முன்பாக வேளாண் சட்டங்களை எதிர்த்து தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து பல்வேறு மாநில விவசாயிகள் டெல்லியில், மாதக் கணக்கில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் தமிழ்நாட்டிலிருந்து காவேரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 25 பேர் டெல்லி சென்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்கள், நேற்று (16-08-2021) டெல்லியில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தகவல் மையம் முன்பாக வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராட்டம் நடத்தினர். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர்கள், “இந்தியாவில் விவசாயிகளுக்கு எதிராக கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டுமென்று கடந்த 8 மாதங்களுக்கு மேலாக விவசாயிகள் போராட்டம் செய்து கொண்டிருக்கிறோம்.

இவர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் தமிழகத்தில் இருந்து காவேரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 25 பேர் டெல்லி வந்து ஒரு வாரமாகப் போராடி வருகிறோம். ஆனால் இதுவரை மத்தியில் ஆளும் பாஜக அரசு ஏதோ இந்தவிவசாயிகள் போராட்டத்திற்கும் நமக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பது போன்று நடந்து கொள்வது இந்தியாவின் ஒட்டு மொத்த விவசாயிகளையும் வேதனை அடையச் செய்துள்ளது.

ஆகவே இந்தமத்திய அரசின்நிலையை முடிவுக்குக் கொண்டுவர, விவசாயிகள் போராட்டத்தை உலக நாடுகள் கவனத்திற்குக்கொண்டு செல்ல விரும்புகிறோம். உலக நாடுகளின் அமைப்பான ஐக்கிய நாடுகள் சபை இப்பிரச்சனையில் தலையிட்டு இந்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும். காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்புமாநிலத் தலைவர் கே.வீ.இளங்கீரன் தலைமையில், மாவட்டத் தலைவர் தூத்தூர் தங்க.தர்மராஜன் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் ஆர்ப்பாட்டம் செய்கிறோம்” என்று தெரிவித்தனர்.

Delhi farmers bill
இதையும் படியுங்கள்
Subscribe