Tamil Nadu drivers stuck in northern states are in agony

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சியங்கள் சட்டம் என 3 குற்றவியல் சட்டங்கள் கடந்த டிசம்பர் 25 ஆம் தேதி வரை அமலில் இருந்தன. இவற்றுக்கு மாற்றாக 3 புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு உருவாக்கியது. அதன்படி, நாடாளுமன்றத்தில் 3 குற்றவியல் மசோதாக்கள் இந்தியில் தாக்கல் செய்யப்பட்டன.

Advertisment

அதில், இந்திய தண்டனைச் சட்டம் என்பதை பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் எனவும், குற்றவியல் நடைமுறை சட்டம் என்பதை பாரதிய நாகரிக் சுரக்‌ஷ சன்ஹிதா எனவும், இந்திய சாட்சியங்கள் சட்டம் என்பதை பாரதிய சாக்சியா எனவும் பெயர் மாற்றம் செய்யப்பட்ட 3 மசோதாக்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். இந்த மசோதாக்கள் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டு ஒப்புதல் அளித்திருந்தார். இதனையடுத்து 3 புதிய குற்றவியல் மசோதாக்களும் கடந்த 25 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன.

Advertisment

அதே சமயம் பாரத நியாய சன்ஹிதா என்ற பெயரில் புதிதாக கொண்டு வரப்பட்ட புதிய குற்றவியல் சட்டத்தில் விபத்தால் மரணம் ஏற்பட்டால் ஓட்டுநர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதாவது ஹிட் அண்ட் ரன் (Hit and Run) வழக்கில் சிக்கும் ஒட்டுநர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், கவனக்குறைவாக வாகனத்தை ஓட்டி உயிரிழப்பு ஏற்படுத்தினால் ஒட்டுநர்களுக்கு 5 ஆண்டுகள் சிறை என இச்சட்டம் கூறுகிறது. எனவே விபத்து தொடர்பான இந்த விதிமுறைக்கு ஓட்டுநர்கள் எதிர்ப்பு தெரிவித்து உத்திரப்பிரதேசம், மஹாராஷ்ட்ரா, பஞ்சாப், பீகார், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்களில் கார், பேருந்து, லாரி ஒட்டுநர்கள் முக்கிய சாலைகளை முடக்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் குஜராத், உத்திரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஓட்டுநர்கள் மற்றும் காவல்துறையினர் இடையே மோதல் சம்பவங்களும் நிகழ்ந்து வருகின்றன.

இந்நிலையில் லாரி ஓட்டுநர்களின் இந்த போராட்டத்தால் மத்தியப் பிரதேசத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ஓட்டுநர்கள் தவித்து வருகின்றனர். மத்தியப் பிரதேச மாநிலம் சாஹர் அருகே காடுகள் சூழ்ந்த இடத்தில் அமைந்துள்ள நெடுஞ்சாலையில் சுமார் 50 கி.மீ. தூரத்திற்கு லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதனால் தமிழகத்தைச் சேர்ந்த ஓட்டுநர்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமல் சிக்கி தவிப்பதாக லாரி ஒட்டுநர் ஒருவர் வீடியோ மூலம் தெரிவித்துள்ளார். இதே போன்று பல்வேறு மாநிலங்களிலும் ஓட்டுநர்கள் சிக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நாளொன்றுக்கு தமிழகத்தில் இருந்து சுமார் 50 ஆயிரம் லாரிகள் வடமாநிலங்களுக்கு சரக்குகளை ஏற்றிச் செல்கிறது என்பதுகுறிப்பிடத்தக்கது.

Advertisment