ADVERTISEMENT

“தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளது சரியல்ல” - கர்நாடக துணை முதல்வர்

12:55 PM Aug 15, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22வது ஆலோசனைக் கூட்டம் கடந்த 11 ஆம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே. ஹல்தார் தலைமை தாங்கி இருந்தார். இக்கூட்டத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகம், கேரளாவைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றிருந்தனர். தமிழக அரசின் சார்பில் நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரைத் திறந்து விட வேண்டும் எனத் தமிழகத்தின் சார்பில் கலந்து கொண்ட அதிகாரிகள் கோரிக்கைகளை எடுத்து வைத்தனர். ஆனால் கர்நாடக அரசு தரப்பிலான அதிகாரிகள் அதற்கு மறுப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரைத் திறந்து விட வேண்டும் என ஆணையம் உத்தரவு பிறப்பித்து இருந்தது. அதன்படி காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்திருந்த உத்தரவில் வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி என 38 டி.எம்.சி தண்ணீரைத் திறக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கு முன்னதாகத் தண்ணீரைத் திறக்க கர்நாடக அரசு மறுப்பு தெரிவித்ததால் கூட்டத்தில் பங்கேற்ற தமிழக அதிகாரிகள் வெளிநடப்பு செய்திருந்தனர்.

அதனைத் தொடர்ந்து நேற்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள 113 பக்க மனுவில், கடந்த 11 ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22வது ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் முன் வைக்கப்பட்ட கோரிக்கைகள், வாதங்கள், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதங்கள் குறித்தும் அந்த மனுவில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. மேலும் ஜூன் 1 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை 53 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடக அரசு வழங்கியிருக்க வேண்டும். ஆனால் கர்நாடக அரசு இதுவரை 15 டி.எம்.சி. தண்ணீரை மட்டுமே திறந்துவிட்டுள்ளதாகவும், காவிரியில் இருந்து விநாடிக்கு 24 ஆயிரம் கன அடி நீர் திறந்து விட வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் கர்நாடக துணை மாநில முதல்வரும் நீர்ப்பாசனத்துறை அமைச்சருமான டி.கே. சிவகுமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது காவிரி நதி நீர் விவகாரம் குறித்து அவர் பேசுகையில், மழை குறைவு காரணமாக பயிரிட வேண்டாம் என்று கர்நாடக மாநில விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக குறிப்பிட்டார். தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளது சரியல்ல. நீர் இருப்பின் அடிப்படையில் தண்ணீரைத் திறந்து விடும் பொறுப்பு காவிரி மேலாண்மை ஆணையத்திடம் உள்ளதை உணராமல் தமிழக அரசு செயல்படுவதாகவும் கூறியுள்ளார். தமிழகத்திற்கு தண்ணீரைத் திறக்கக் கூடாது என்ற நிலைப்பாடு இல்லை என்றும், நிலைமையைப் பார்த்து கார்நாடக அரசே தண்ணீரைத் திறக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT